‘நடிகர் சிவாஜி கணேசன் குறித்து சர்ச்சைப் பேச்சு’.. ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வலுக்கும் கண்டனம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவாஜி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் வலுத்துள்ளது.
சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நடிகர்களுக்கு வயதாகிவிட்டால் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்படங்களில் கிடைத்த விளம்பரத்தை வைத்து தலைவராகப் பார்க்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை பொறுப்புகள் இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும். இடைத்தேர்தலில் அவரது கட்சி ஏன் போட்டியிடவில்லை. இனிமேல் நடிகர்கள் யார் கட்சி தொடங்கினாலும், அவர்களுக்கு சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைமைதான் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு சிவாஜி சமூக நலப்பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள அந்த அமைப்பின் தலைவர், “வயதான பிறகு நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என அவருடைய கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரையும் சேர்த்துதான் சொல்கிறார் என நினைக்கிறேன். காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைத்தபோது, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்தவர் நடிகர் திலகம். சிவாஜி நினைத்திருந்தால் அவருக்குப் பதவிகள் தேடி வந்திருக்கும். ஆனால் அவர் சுயமரியாதையின் காரணமாகவே எந்தப் பதவியையும் தேடிப்போகவில்லை. பதவி இருக்கும் வரைதான் இவர்களுக்கு மரியாதை. ஆனால் தமிழ் வாழும் வரை நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.