இடைவிடாத சேசிங்!.. அடுத்தடுத்து திருப்பங்கள்'!.. சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தது எப்படி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல்துறை மடக்கி பிடித்த சம்பவத்தின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
அதையடுத்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று டேராடூன் புறப்பட்டு சென்றனர். ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.
நேபாள நாட்டில் சிவசங்கர் பாபாவுக்கு நீண்ட தொடர்புகள் இருப்பதாக கூறப்படுவதால் அவர் நேபாள நாட்டிற்கு தப்பிச்சென்றிருக்கலாமா? என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த பாரதி, தீபா என்ற 2 பெண் ஆசிரியர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் தற்போது சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மேலும், சிவசங்கர் பாபா எங்கு உள்ளார் என்பது குறித்து அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆசிரியர்களிடம் மற்றொரு தனிப்படை சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே, சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு எங்கும் தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் நேற்று லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இதனால், சிவசங்கர் பாபா இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்தில் இருந்தும் வெளிநாடுகள் செல்ல முடியாத நிலை உருவானது. ஆனால், சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேபாளத்தில் இருப்பதாக கூறப்படுவதால், அவர் தரை மார்க்கமாக நேபாளத்திற்கு சென்றிருக்கலாமா? என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் - டெல்லி எல்லையில் உள்ள காசியாபாத்தில் சிவசங்கர் பாபாவை அதிரடியாக மடக்கிப் பிடித்ததுள்ளது சிபிசிஐடி காவல்துறை. டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா இன்று இரவு அல்லது நாளை சென்னை அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்