'போலீஸ்' எஸ்.ஐ தேர்விலும் 'முறைகேடு'... "அப்போ நாங்கள்ளாம் என்ன 'இது'க்குடா எக்ஸாம் எழுதுனோம்... "கொந்தளிக்கும் தமிழக 'இளைஞர்கள்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டி.என்.பிஎஸ்.சி குரூப் -4 தேர்வில் முறைகேடு நடைபெற்று தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில் அடுத்து சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் உதவி ஆய்வாளர்களுக்கு நடைபெற்ற தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

'போலீஸ்' எஸ்.ஐ தேர்விலும் 'முறைகேடு'... "அப்போ நாங்கள்ளாம் என்ன 'இது'க்குடா எக்ஸாம் எழுதுனோம்... "கொந்தளிக்கும் தமிழக 'இளைஞர்கள்'...

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள தாலுக்கா உதவி ஆய்வாளர், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 1905 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஜனவரி 11-ம் தேதி காவல்துறை ஒதுக்கீட்டிற்கான தேர்வும்,13 ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான தேர்வும் தனித்தனியாக நடைபெற்றது

இந்தத் தேர்வில் குறிப்பிட்ட பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் தேர்வு பெறும் விதமாக முறைகேடு நடந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கடிதங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. பெயர் குறிப்பிடப்படாத அந்த புகார் கடிதத்தில் வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டில் செயல்பட்டு வரும் காவலர் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் குறித்து சொல்லப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி அந்த பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த போதுதான் நடந்து முடிந்த காவலர் தேர்வு பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

குறிப்பாக ஜனவரி 13-ம் தேதி நடந்து முடிந்த தேர்வில் அந்த பயிற்சிப் பள்ளியில் படித்த 70 மாணவர்களுக்கு தேர்வுக்கு முதல் நாளே 170 மதிப்பெண்களுக்கான மொத்த கேள்விகளில் 130 மதிப்பெண்களுக்குரிய கேள்விகளுக்கான விடைகள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு ஆகிய மையங்களில் காவலர் ஒதுக்கீட்டுக்காக நடைபெற்ற தேர்வுகளில் செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தேர்வு தாளை மாற்றி முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும் தேர்வு மேற்பார்வையாளராக முதல்நிலை தலைமைக் காவலரை நியமித்ததும் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

பகீர் குற்றச்சாட்டுகளை அடுத்து, தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த முறைகேடுகள் அரசு தேர்வு வாரியங்களை நம்பி காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

SI EXAMINATION, TNPSC, SCANDAL, YOUTHS TURMOIL