'தொடரும் சோகம்'...'அலட்சியத்தால் போன இளைஞரின் உயிர்'...தாம்பரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெரு நாய்க்கு உணவு கொடுப்பதற்காக சென்ற இளைஞர் மின்கம்பம் உடைந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் சேது. இவர் வழக்கமாக தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நாய்க்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அந்த நேரத்தில் சேதம் அடைந்திருந்த சிமெண்ட் மின்கம்பம் உடைந்து சேது மீது விழுந்தது. அப்போது மின்கம்பிகளும் அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் சேது மீது உயரழுத்த மின்சாரம் பாய்ந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் சேது அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சேது பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே சேதுவின் மரணம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய அந்த பகுதி பொதுமக்கள் ''சிட்லபாக்கம் பகுதியில் மின்கம்பங்கள் சேதம் அடைந்திருப்பது குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை'' என குற்றம் சட்டியுள்ளார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால் சேது அநியாயமாக உயிரிழந்து விட்டதாக அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளார்கள்.
முன்னதாக முகலிவாக்கம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.