"'விஜய்' எத்தனையோ தடவ சொல்லிப் பாத்துட்டாரு,,.. ஆனாலும் அவரு கேக்கல,.." ஷோபா சந்திரசேகர் சொன்ன பரபரப்பு 'கருத்து'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், அவர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்ட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் விஜய் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதில் தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றும், தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி அரசியல் கட்சி ஆரம்பித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் தான் விஜய் பெயர் மற்றும் மக்கள் இயக்கத்தை பயன்படுத்தி அரசியல் கட்சியை தொடங்க முயற்சி செய்ததும் தெரிய வந்தது.
இது தொடர்பாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், 'மக்களின் நன்மைக்காக தான் விஜய் பெயரில் கட்சி அராம்பிக்க முயற்சி செய்தேன். மற்றபடி இந்த கட்சிக்கும் நடிகர் விஜய்க்கும் எந்த சம்மந்தமுமில்லை' என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் இந்த விவகாரம் தொடர்பாக தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், 'ஒரு மாதத்திற்கு முன் அசோசியேஷன் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எனது கையெழுத்து வேண்டும் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் என்னிடம் கையெழுத்து ஒன்றை வாங்கினார். அதனைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு கையெழுத்து வேண்டுமென அவர் என்னிடம் கேட்டார்.
அப்போது அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டித் தான் என்னிடம் கையெழுத்து கேட்கிறார் என்பதை அறிந்து கொண்டு நான் கையெழுத்திட மறுத்தேன். விஜய்க்கு தெரியாமல் கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினேன். அரசியல் தொடர்பாக மீடியாக்களில் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சியிடம் விஜய் பலமுறை கூறியுள்ளார்.
ஆனால், அவர் தொடர்ந்து கேட்காமல் அரசியல் குறித்து பேசி வருவதால் விஜய் தந்தையிடம் தற்போது பேசுவதில்லை. கட்சியின் பொருளாளர் என எனது பெயர் எனக்கு தெரியாமல் இடம்பெற்றிருந்ததால் நான் அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன்' என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்விக்கு அதனை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என ஷோபா சந்திரசேகர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்