'அங்க கேரளால பண்ணியிருக்காங்க பாருங்க...' 'அதேப்போல நம்ம தமிழ்நாட்டுலையும் பண்ணனும்...' 'அப்படி பண்ணா' மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்...! - சீமான் அறிக்கை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸின் பாதிப்பு மக்களை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையையொட்டி கடந்த ஆண்டில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து பொதுமக்களும், தொழில் புரிபவர்களும் இன்னும் மீண்டுவர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வேலையிழப்பு, வருமானமிழப்பு, தொழில்முடக்கம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரமே பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
தீவிரமாக அதிகரித்து வரும் கொரோனாவினால் ஊரடங்கு இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமோ என்ற பயமும் மக்களிடம் உருவாகியுள்ளது. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் உண்டு, உயிர்வாழ முடியும் என்ற நிலையிலிருக்கும் தினக்கூலிகள், தெரு வியாபாரிகள் உள்ளிட்ட பாமர மக்கள் உணவு, குடிநீர், மருத்துவச் செலவு முதலிய அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், கடன் தவணை உள்ளிட்ட மாதாந்திர செலவுகள் அவர்களை நெருக்கடிக்கு மேல் நெருக்கடியாக்கி கடும்மன உளைச்சலை உருவாக்குகிறது.
இந்த கொடும் தொற்று காலத்தில், பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அரசின் கடமை. நமது அண்டை மாநிலமான கேரளாவில் மக்களின் துன்பங்களை உணர்ந்து, குடிநீர் கட்டணம் மற்றும் மின்சாரக் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்மூலம் மக்களின் சுமையை குறைக்கும் நடவடிக்கையை கேரள அரசு எடுத்துள்ளது.
எனவே , தேவையான அளவிற்கு வருமானம் இல்லாமலும், தொழில் முடக்கத்தாலும் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடப் பிழைப்புகூடக் கேள்விக்குறியாகி நிற்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் துன்பத்தில், சிறிதளவைக் குறைக்கும் வகையில், தமிழக அரசு வருகின்ற இரண்டு மாதத்திற்கு மின்கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
அப்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள எளிய நடுத்தர மக்களுக்குக் குறைந்தபட்சமான ஆறுதலையாவது வழங்கிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என சீமான் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்