சாத்தான்குளம் அருகே மீண்டும் பயங்கரம்!.. கொலை சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!.. உறவினர்கள் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே காரில் கடத்தி சென்று லாரி ஓட்டுனர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையின் தூண்டுதலாலே கொலை நடந்துள்ளதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் அருகே மீண்டும் பயங்கரம்!.. கொலை சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!.. உறவினர்கள் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தண்ணீர் லாரி ஓட்டி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது. செல்வத்துக்கும் அவரின் உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக இருதரப்பினருக்கும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் இது தொடர்பாக செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். தட்டார்மடம் காவல்நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் எதிர்தரப்புக்கு சாதாகமாக செயல்பட்டு வந்ததாகவும் செல்வம் நீதிபதியிடத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செல்வம் நேற்று மோட்டார் சைக்கிளில் கொழுந்தட்டு விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரைக் கடத்திச் சென்றது. பொதுமக்கள் இது குறித்து தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு கிடந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றியதுடன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

                      

இதற்கிடையே , செல்வத்தைக் காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல் அவரைக் கட்டையால் அடித்து குற்றுயிரும் குலைஉயிருமாக சாத்தான்குளம் அருகே காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். உயிருக்குப் போராடிய செல்வத்தை பொதுமக்கள் மீட்டு திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

செல்வத்தின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப போலீஸார் முயன்ற போது, அவரின் உறவினர்கள் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தட்டார்மடம் காவல் ஆய்வாளர் தூண்டுதலின் பேரில்தான் செல்வம் கொலை நடந்ததுள்ளது. எனவே, காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                

இதனைத் தொடர்ந்து திசையன்விளை காவல் நிலையத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் செல்வத்தின் உறவினர் திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது 107, 336, 302, மற்றும் 364 என்ற 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், செல்வம் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாத்தான்குளம் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலையிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், தற்போது மற்றோரு கொலை சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்