'சாத்தான்குளம்' கொலை வழக்கில் புதிய திருப்பம்... போலீசாரின் FIR தகவலுக்கு நேர்மாறான 'சிசிடிவி' 'ஆதாரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த சில தினங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததாக தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்ற நிலையில், கோவில்பட்டி கிளை சிறையில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசாரின் கடுமையான தாக்குதலில் தான் இருவரும் உயிரிழந்ததாக அவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வழக்கின் புதிய திருப்பமாக காவல்துறையின் FIR தகவல்களுக்கு மாறாக உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. போலீஸ் அளித்த FIR தகவலில் ஊரடங்கு உத்தரவை மீறி இரவு 9 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்திருந்த நிலையில், அந்த இடத்தில் கூட்டமாக நின்றதாகவும், அதற்காக தான் அவர்களை விசாரித்ததாகவும், அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் தரையில் விழுந்து புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த 19 ஆம் தேதியன்று இரவு 9 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் FIR பதிவில் தெரிவித்திருந்த நிலையில் சிசிடிவி நேரப்படி இரவு சுமார் 7:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதே போல, அங்கு யாரும் கூட்டமாக நிற்காத நிலையில், ஜெயராஜ் தனியாக நின்றுள்ளார். அப்போது அவரை அழைத்த போலீசார், அவரை போலீசார் வாகனத்தில் ஏற்றுவதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து தந்தையை போலீசார் விசாரிப்பதைக் கண்ட பென்னிக்ஸ், போலீசாருடன் ஏதோ பேசிவிட்டு வருவதும், பின்னர் தந்தையை போலீசார் அழைத்து செல்வதும் தெரிய வந்தது. இதனால் போலீசார் அளித்துள்ள தகவலுக்கு மாறாக இந்த சிசிடிவி காட்சிகள் இருப்பது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய நிலையில், பொது மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்