‘சிறையிலிருந்து விடுதலை ஆன சசிகலா’!.. ஆனாலும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.. காரணம் என்ன..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சசிகலா சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தாலும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவடைய இருந்த நிலையில் சசிகலா உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. மூச்சு திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்றும், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி, சசிகலாவின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. அதனால் கர்நாடக சிறை அதிகாரிகள், சசிகலா சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு, இன்று காலை சென்று விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெற்றனர். தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டதற்கான கோப்புகளை மருத்துவமனையிலும் ஒப்படைத்தனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளிகள், விடுதலையான நாளில் இருந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, தண்டனை அனுபவிக்க தொடங்கிய நாளில் இருந்து சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இதில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. அதனால் நாளை முதல் 6 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது. அதே நேரத்தில் கட்சி பதவிகளை வகிக்க எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்