'வாழ்க்கை ஒரு வட்டம்'...'20 மாத குழந்தைக்கு உயிர் கொடுத்த மருத்துவமனை'... 'இப்போ அதே மருத்துவமனையில் டாக்டர்'... சாதித்து காட்டிய தமிழக இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்'வாழ்க்கை என்பது ஒரு வட்டம்' நாம் எங்கு ஆரம்பிக்கிறோமோ அங்கு தான் முடிக்கிறோம் என்ற கூற்றை நிஜமாக்கும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் கந்தசாமி. இவர் கடந்த 1998-ம் ஆண்டு 20 மாதக் குழந்தையாக இருந்தபோது, கல்லீரலில் (பைலியரி ஆர்ட்டிசியா) பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்கள். இதையடுத்து சஞ்சய் கந்தசாமியின் தந்தையிடம் இருந்து 20 சதவீதம் கல்லீரல் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாட்டிலேயே முதல் முறையாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதல் குழந்தை சஞ்சய் கந்தசாமிதான். இது அப்போதைய காலகட்டத்தில் மருத்துவத் துறையில் பெரும் முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையானது டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் செய்யப்பட்டது. மருத்துவர் அரவிந்தர் சிங் சியோன், மருத்துவர் ராஜசேகர் உள்ளிட்டோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சஞ்சய் கந்தசாமிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
இந்நிலையில் தற்போது 23 வருடங்கள் கழித்து ஆச்சரியமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அன்று 20 மாத குழந்தையாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட, சஞ்சய் கந்தசாமி இன்று மருத்துவம் படித்து அதே மருத்துவமனையில் மருத்துவராகச் சேர்ந்துள்ளார். மருத்துவர் சஞ்சய் கந்தசாமி ஒரு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “சிறு குழந்தையாக இருந்ததிலிருந்து மருத்துவர் ஆவது என்னுடைய கனவாக இருந்தது.
நான் இன்று உயிரோடு இருப்பதற்கும், உயிர் வாழ்வதற்கும் எனக்கு அறுவை சிகிச்சையளித்த மருத்துவர்கள்தான் காரணம். அதனால் தான் மருத்துவர் ஆகிப் பல உயிர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் தோன்றியது. எனக்கு அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்று தான் ஆசை இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்பதால், குழந்தைகள் நல மருத்துவரானேன். பச்சிளங் குழந்தைகளுக்கு சிகிச்சையளித்தல், குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு சிகிச்சையளித்தல் பிரிவில் (நியோ நானோடாலஜி) சிறப்பு நிபுணராகக் கவனம் செலுத்த உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே சஞ்சய் கந்தசாமிக்கு அறுவை சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்றிய அரவிந்தர் சிங் சியான் தற்போது குரு கிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், கல்லீரல் மாற்றுச் சிகிச்சை மற்றும் மருந்து மீள் உருவாக்கம் பிரிவின் தலைவராக இருக்கிறார். தற்போது சஞ்சய் கந்தசாமி மருத்துவராகி அதே மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் பணியாற்றுவது குறித்துப் பேசிய அவர், ''அந்த நாட்களை என்னால் இன்னும் மறக்க முடியாது.
நாங்களும் அந்தக் குழந்தையுடன் இரு மாதங்களாக ஐசியுவிலேயே வாழ்ந்தோம். 2 வயதுகூட நிரம்பியிருக்காது அந்தக் குழந்தைக்கு. அப்போதுதான் அறுவை சிகிச்சை செய்தோம். மிகவும் சிக்கலான, இந்தியாவிலேயே முதல் முறையாகச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையாகும். நான் அறுவை சிகிச்சை செய்த 40 குழந்தைகளும் 12 வயதுக்கு மேல் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்கள்.
இந்தக் குழந்தைகள் 40 வயதைக் கடந்து நன்றாகவே இருக்கிறார்கள். இதுபோன்ற குழந்தைகளைப் பற்றிப் பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார். இதனிடையே மருத்துவர் சியான் தனது ட்விட்டர் பக்கத்தில், இளம் மருத்துவர் சஞ்சய் கந்தசாமிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் சஞ்சய் கந்தசாமிக்கு அறுவை சிகிச்சை செய்த மற்றொரு மருத்துவர் ராஜசேகர் கூறுகையில், “என்னுடைய 28 ஆண்டுக் கால மருத்துவர் வாழ்க்கையில் என்னால் அந்த அறுவை சிகிச்சையை மறக்க முடியாது. பெருமைக்குரிய தருணம். நான் அறுவை சிகிச்சை செய்த குழந்தை மருத்துவர் ஆனது எனக்குப் பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
This is so so special. I couldn’t be prouder. Transplanted Sanjay exactly 22 years ago. He was 18 months old. Seems like yesterday.
— Dr. Arvinder Singh Soin (@ArvinderSoin) November 19, 2020
And right when we need him on the frontlines! Godspeed.👏 pic.twitter.com/EwDlxm7nLy
மற்ற செய்திகள்