‘என் மகன் சாகல’!.. ‘சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த இளைஞர் இதயம்.. கண்கலங்க வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

‘என் மகன் சாகல’!.. ‘சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த இளைஞர் இதயம்.. கண்கலங்க வைத்த சம்பவம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்நார்யப்பனூர் அடுத்த பெருமாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேந்திரன் (20). இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சுரேந்திரன் மூளைச்சாவு அடைந்தார். இதனால் உடல் உறுப்பு தானம் குறித்து சுரேந்திரனின் பெற்றோரிடம் மருத்துவர்கள் விளக்கினர். இதனை அடுத்து மகனின் உடலுறுப்பை தானம் செய்ய அவர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சுரேந்திரனின் இதயம், நுரையீரல், இரு சிறுநீரகங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இதில் நுரையீரல், ஒரு சிறுநீரகம் மணிப்பால் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதயம் சென்னை குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 6 மணி நேரத்துக்குள் தானம் பெறுபவருக்கு இதயம் பொருத்தப்படவேண்டும் என்பதால் விமானத்தில் எடுத்துச் செல்ல மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்காக சேலம்-சென்னை இடையே இயக்கப்படும் ட்ரூஜெட் விமான நிர்வாகத்துக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே களத்தில் இறங்கிய போலீசார், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் வரை உள்ள சுமார் 23 கிலோமீட்டர் தூரப் போக்குவரத்தை சீர் செய்யத் தொடங்கினர். இதற்காக சேலம் முள்ளுவாடி கேட் அஸ்தம்பட்டு, ஐந்து ரோடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தை 15 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் கடந்து சென்றது.

இதயம் கொண்டுசெல்ல இருந்த அதே விமானத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பயணம் செய்ய இருந்தார். அதனால் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே ஆளுநர் மற்றும் சகபயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருந்தனர். இதனை அடுத்து இதயத்துடன் வந்த ஆம்புலன்ஸ் வந்ததும் அதனை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டது. அரசு மருத்துவமனை முதல் விமான நிலையம் வரையிலான 40 நிமிட பயண நேரம், போலீசாரின் துரித நடவடிக்கையாலும், வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பாலும் 15 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் செல்ல முடிந்தது.

மகனின் உடல் உறுப்பு தானம் குறித்து தெரிவித்த பெற்றோர், ‘என் மகன் இறந்துவிட்டாலும் அவனது உடல் உறுப்புகள் மற்றவர்களை வாழ வைக்கப் பயன்படுவது ஆறுதலாக இருக்கு, என் மகன் சாகல இன்னொருவரின் ரூபத்தில் உயிரோடுதான் இருக்கிறான்’ என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

SALEM, ACCIDENT, CHENNAI, ORGANDONATE