'இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்'... 'வாயடைத்து போன ஊர்மக்கள்'... காலேஜ் இல்லாத நேரத்தில் சாதித்த இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவலால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருக்கும் மாணவர்கள் எப்போதும் மொபைல் போனும் கையுமாக இருப்பதாகப் பல பெற்றோர்கள் புலம்பி வரும் நிலையில், கிடைத்த நேரத்தில் தனது யோசனையில் வந்த திட்டத்தைச் செயல்படுத்தி அசத்தி இருக்கிறார் இளைஞர் ஒருவர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே காரைக்காடு, இடும்பன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்கார வேலு. விவசாயம் செய்து வரும் இவரின் மகன் தட்சிணாமூர்த்தி தனியார் கல்லூரியில் டிப்ளமா இறுதியாண்டு மெக்கானிக் பிரிவில் படித்து வருகிறார். தனது படிப்பு சார்ந்து எதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என, எப்போதும் ஆர்வமாக இருக்கும் தட்சணாமூர்த்தி, தற்போது கிடைத்த நேரத்தை அதற்காகப் பயன்படுத்திக் கொண்டார். கொரோனா காரணமாக தற்போது கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்த நேரத்தில் சுண்ணாம்புக் கல்லுடன் நீரைக் கலந்து, அதிலிருந்து வெளியேறும் வாயுவை எரி பொருளாகக் கொண்டு இரு சக்கர வாகனத்தை இயக்கிக் காட்டினார்.
இதைப் பார்த்து கிராம மக்கள் பலரும் வியந்து போனார்கள். டிப்ளமா படித்துக் கொண்டு இருக்கும் போதே மாணவனுக்குள் இருந்த தேடல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் தனது இரு சக்கர வாகனத்தைத் தண்ணீரில் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளார். இது கிராம மக்களுக்கு மேலும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சாதாரண குடும்ப சூழ்நிலையில் இருந்த போதும், தன்னிடம் இருக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தைத் தண்ணீரில் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளது, பலருக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
கிடைத்த நேரத்தை வீணடிக்காமல் அதைப் பயனுள்ளதாக மாற்றிய மாணவன் தட்சணாமூர்த்தியை அந்த கிராம மக்கள் பலரும் பாராட்டினார்கள். தட்சணாமூர்த்தியின் கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மற்ற செய்திகள்