'தீவிர காங்கிரஸ்காரர்'... 'மக்கள் சேவையே பிரதானம்'... ‘மீண்டும் நாங்குநேரியில் களம் காணும் டாக்டர் ரூபி மனோகரன்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், சென்னை கட்டுநர்களில் மிக முக்கியமானவருமான டாக்டர் ரூபி மனோகரன், அரசியல், கட்டுமானத்தொழில் என்பதோடு மட்டுமல்லாமல், சமூக சேவை மற்றும் எழுத்துப்பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் டாக்டர் ரூபி மனோகரனும் ஒரு வேட்பாளராகக் களம் இறங்கி, தனது தொகுதியான நாங்குநேரியில் வாக்கு கேட்டு மக்களிடையே வலம் வந்துகொண்டிருக்கிறார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் தனது கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரன் நேற்று முன் தினம் (மார்ச் 18, 2021) நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். டாக்டர் ரூபி மனோகரன், நாங்குநேரி தொகுதிக்கு புதியவர் அல்ல. இதே நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அங்குக் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் கண்டார் இவர்.
25 வருடங்கள் கட்சி பணியாற்றி வரும் இவர் தீவிர காங்கிரஸ்காரர். கட்டுமானத் துறையில் ஆர்வம் கொண்டு ரூபி பில்டர்ஸ் என்ற குழுமத்தைத் தொடங்கிய இவர், தற்போது, இத்துறையில் மிகப்பெரிய சாதனையாளராகவே பார்க்கப்படுகிறார். இவரது கட்டுமான நிறுவனம் 22 ஆண்டுகளில் 1000 குடியிருப்புகளுக்கு மேல் கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் விமானப் படை அதிகாரியான டாக்டர் ரூபி மனோகரன், விமான நிலைய ஆணையத்திலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கட்டுமானத்துறையின் மீது கொண்ட காதல் காரணமாக, அந்த துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக நீங்களும் பில்டர் ஆகலாம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். கட்டுமானத் துறையில் செய்த பல சாதனைகளுக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார், ரூபி மனோகரன்.
காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவராக இருக்கும் ரூபி மனோகரன், லயன்ஸ் கிளப்பிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். கன்னியாகுமரி மாவட்டம் குன்னத்தூரில் பள்ளி ஒன்றை நடத்தி வரும் இவர், இது போன்ற பல சமூகப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டு வருபவர்.
மக்களிடம் எளிதில் பழகும் இவரது குணம் கட்சி தொண்டர்களிடையே மிகவும் பிரபலம். சமீபத்தில் தமிழகம் வந்த ராகுல் காந்தி நாங்குநேரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ரூபி மனோகரனை ராகுல் காந்தி தனது கையை கொடுத்து அழைத்து அவரது பிரச்சார வாகனத்தில் அமரவைத்தது, ‘ஹிட்’ வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வைரலானது.
கடந்த முறை, இதே தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றிருந்தாலும், வெற்றி, தோல்வி என்கிற பேதம் பார்க்காமல், கொரோனா காலத்தில் இதே நாங்குநேரிக்கு வந்து பல மாதங்கள் இங்கேயே தங்கி மக்கள் சேவை ஆற்றினார், ரூபி மனோகரன்.
தற்போது, நாங்குநேரிக்கே குடி வந்து, இத்தொகுதியினை தனது வீடாக மாற்றி மக்களோடு மக்களாகக் கலந்து விட்டார், ரூபி மனோகரன். பல ஆண்டுகளாகப் பல விதமான இன்னல்களைச் சந்தித்துவரும் இம்மக்களுக்குத் தான் ஏதாவது செய்யவேண்டும் என்று பேராவல் கொண்டு, இத்தேர்தலில் வெற்றி பெற மிகத்தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார், இவர்.
இவர் நாங்குநேரியில் போட்டியிடுவதால் அத்தொகுதியே ஸ்டார் தொகுதியாகியுள்ளது. அவர் நிச்சயம் ஸ்டார் தொகுதியான நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெறுவார் எனக் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்!
மற்ற செய்திகள்