'ஹெல்மெட் அணிந்துவந்து கொள்ளையடிக்க முயற்சி'... 'வந்தவேகத்தில் திரும்பிப் போன மர்மநபர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்.மில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம் மெஷினை உடைத்து பணத்தைத் திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு - கரூர் சாலையில் அமைந்திருக்கிறது மூலப்பாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை. இந்த வங்கியையொட்டி 10 அடி தூரத்திலேயே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியினுடைய ஏ.டி.எம். ஒன்று அமைந்திருக்கிறது. இந்நிலையில், இந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க, வியாழக்கிழமை காலை ஒருவர் சென்றபோது இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து வங்கி ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, வங்கி ஊழியர்கள் வந்து பார்த்தபிறகு சூரம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் விசாரணை நடத்தினார். பின்னர் ஏடி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டனர். அதில் வியாழக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் ஹெல்மெட் அணிந்தபடி மர்மநபர் ஒருவர் ஏ.டி.எம்.முக்குள் நுழைகிறார்.
பின்னர் கையில் கொண்டு வந்திருந்த கம்பி மூலமாக, ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வரும் பகுதியை உடைத்தெடுத்திருக்கிறார். இருந்தும் ஏ.டி.எம்மினுள் உள்ள பணத்தை எடுக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 5 நிமிடங்களாக ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை எடுக்கும் முயற்சி தோல்வியடையவே, பதறிப்போன அந்த மர்மநபர், ஏ.டி.எம்மில் இருந்து அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து செல்வதும் பதிவாகியிருந்தது. சம்பவம் நடந்த இந்த ஏ.டி.எம்மில் சுமார் ஏழு லட்ச ரூபாய் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொள்ளையடிக்க வந்த மர்மநபர் ஹெல்மெட் அணிந்து வந்திருந்ததால், அவரது அடையாளங்கள் எதுவும் எ.டி.எம் மையத்துக்குள் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகவில்லை. வங்கிக்க வெளியில் கேமரா இல்லாததால், மர்ம நபர் வந்த வாகன விபரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், வங்கிக்கு எதிர்புறம் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.