'ஹோட்டல் இல்லாதனால எச்சி இலையும் இல்ல' ... 'காலையில இருந்து யாரையும் காணோம்' ... ஊரடங்கால் தளர்ந்து போன ஆதரவற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 - ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பல பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். ஆனால் சாலையோரம் உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவற்ற முதியவர்கள் ஆகியோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

'ஹோட்டல் இல்லாதனால எச்சி இலையும் இல்ல' ... 'காலையில இருந்து யாரையும் காணோம்' ... ஊரடங்கால் தளர்ந்து போன ஆதரவற்றோர்!

சேலம் மாவட்டத்தின் சாலையோரம் இருந்த மூதாட்டி ஒருவர் இது குறித்து கூறுகையில், 'என்னோட கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு மொத்தம் 7 பிள்ளைகள். எல்லோருக்கும் திருமணமாகி விட்டது. ஏழு பிள்ளைகள் இருந்தும் என்னை யாரும் பார்த்துக் கொள்ளவில்லை. இரண்டு வருடமாக இப்பகுதியில் தான் சுற்றி வருகிறேன். யாராவது நல்ல மனம் படைத்தவர்கள் ஏதாவது உணவு வாங்கி தருவார்கள். ஆனால் இன்று காலை முதல் இப்பகுதியில் யாரும் தென்படவில்லை' என தெரிவித்துள்ளார்.

அதே போல சேலம் மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் சாலையோரம் இருந்த தம்பதியர்களிடம் இது குறித்து விசாரித்த போது, 'என்னோட மனைவிக்கு மனநலம் சரியில்லை. எங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் ஒன்றும் இல்லை. நாடோடிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாரவது இரக்கப்பட்டு உணவளித்தாலோ, அல்லது ஹோட்டலில் கிடைக்கும் எச்சில் இலையை பொறுக்கி சாப்பிடுவோம். இப்போது கடைகள் இல்லாத நிலையில் அதுவும் கிடைக்கவில்லை' என்றனர்.

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு சூடான உணவு தயாரித்து வழங்கும் வகையில் பொது சமையல் கூடம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

SALEM, TAMILNADU, LOCKDOWN