‘ரைஸ் புல்லிங் கலசம்’!.. ‘ஆள் கடத்தல்’.. போலீஸ் சேசிங்.. சென்னையை அதிரவைத்த கும்பல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் புகைப்படக் கலைஞரை கடத்திய கும்பலை போலீசார் திரைப்படப் பாணியில் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலிகிராமம் வேலாயுதம் நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர் கடந்த 19-ம் தேதி இரவு தனது கணவர் நியூட்டனை மர்ம நபர்கள் சிலர் கடத்திவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது கணவர் அண்ணா சாலையில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால், அதனை மூடி விட்டு தற்போது அவர் திருமுல்லைவாயில் பகுதியில் புராதன பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 19-ம் தேதி காலையில் கடைக்கு சென்ற கணவர் மீண்டும் வீடு வந்து சேரவில்லை. தனது கணவரை மர்ம நபர்கள் சிலர் கடத்தி விட்டு தனது தந்தையிடம் ரூபாய் 30 லட்சம் பணம் கேட்டு போனில் மிரட்டியதாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் காவல்துறையினர், அசோக் நகர் காவல் உதவி ஆணையர் ரூபன் தலைமையிலான தனிப்படை அமைத்து இந்த கடத்தல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். நியூட்டனின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த அதேவேளையில், கடத்தல் சம்பவத்தின் பின்னணி குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி காலையில் நியூட்டன் மீண்டும் தனது மாமனாருக்கு கால் செய்து ரூபாய் 30 லட்சம் பணத்தை குறிப்பிட்ட பகுதியில் கொடுத்தால்தான் மர்ம நபர்கள் தன்னை விடுவிப்பதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் இரண்டு அணிகளாக பிரிந்து, ஒரு அணி பணத்தை கொடுக்க இரு சக்கர வாகனத்தில் அவர்கள் குறிப்பிட்ட அந்த பகுதிக்கும், மற்றொரு அணியினர் போன் கால் வந்த சிக்னலை பின்தொடர்ந்தும் சென்றனர்.
இந்தநிலையில் பட்டாபிராம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பணத்தை கொண்டுவர சொல்லியுள்ளனர். உடனே அப்பகுதி பணத்துடன் போலீசார் சென்றுள்ளனர். வந்திருப்பது போலீஸ் என அறிந்த பணத்தை வாங்க வந்த 2 மர்ம நபர்கள், தப்பிக்க முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினார்.
விசாரணையில் மாட்டிக்கொண்ட நபர் அரக்கோணத்தை சேர்ந்த கௌதம் என்பதும், தப்பி ஓடிய நபர் திருத்தணியை சேர்ந்த சுனில் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து தப்பி ஓடிய சுனில், நியூட்டனின் மாமனாருக்கு மீண்டும் போன் செய்து போலீசாரிடம் சென்றதால் உங்களது மருமகனை கொலை செய்யப் போகிறோம் என்றும், ரூபாய் 30 லட்சத்தை உடனடியாக கொடுத்துவிட்டால் அவரை விட்டு விடுவோம் எனக் கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் விசாரணையை வேகப்படுத்திய காவல்துறையினர், திருத்தணியில் உள்ள சுனிலின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மூலம் சுனிலை தொடர்பு கொண்டுள்ளனர். போலீசார் தனது வீடு வரை வந்துவிட்டதை அறிந்து பயந்துபோன சுனில், தான் திருப்பதி அருகே இருப்பதாகவும் தானே காவல் நிலையம் வருவதாகவும் கூறி உள்ளார்.
அதே நேரம் கடத்தல்காரர்களின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போலீசார், அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்றுகொண்டிருப்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த தனிப்படை போலீசார், ஸ்ரீபெரும்புதூர் அருகே கடத்தல்காரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை மடக்கி பிடித்தனர். நியூட்டன் மற்றும் அவரது நண்பர் ராகுல்ஜி ஆகியோரை மீட்ட போலீசார், கடத்தல்காரர்களான வில்லிவாக்கத்தை சேர்ந்த விக்கி மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இதனிடையே பணத்தை வாங்குவதற்கு காத்திருந்த திலீப் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சினிமாவை மிஞ்சும் அளவுக்கு மோசடியை நியூட்டன் மற்றும் பெங்களூரை சேர்ந்த அவரது நண்பரான மேத்யூ ஆகியோர் நடத்தி இருப்பதும், அவர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் நியூட்டன் மற்றும் ராகுல்ஜியை கடத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
பெங்களூரை சேர்ந்த தனது நண்பரான மேத்யூ என்பவருடன் சேர்ந்து நியூட்டன் ‘ரைஸ் புல்லிங்’ கலசம் இருப்பதாக கூறி சுமார் 21 பேரிடம் சுமார் 60 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, சாதாரண பித்தளை சொம்பை சாயமிட்டு அதனை ரைஸ் புல்லிங் கலசம் எனக்கூறி ஏமாற்றி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரைஸ் புல்லிங் கலசம் என நம்பி சாதாரண பித்தளை சொம்பை வாங்கி சென்ற நபர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவர, மோசடியில் ஈடுபட்ட நியூட்டன் மற்றும் மேத்யூவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் பணத்தை தராமல் இழுதடிக்கவே, பணம் கொடுத்தவர்கள் அடிக்கடி நியூட்டனிடம் பணம் கேட்டு அவரது வீட்டுக்கே வந்துள்ளனர்.
கடந்த 19-ம் தேதி மேத்யூ சென்னை வர அவரை சந்திக்க நியூட்டன் ஏற்பாடு செய்த நிலையில் திலீப், சதீஷ், கவுதம் உள்ளிட்ட 5 பேர் திருமுல்லைவாயில் சென்றுள்ளனர். அங்கு வாக்குவாதம் முற்றவே மேத்யூ நைசாக நழுவிவிட 5 பேரும் நியூட்டனையும் அவரது நண்பர் ராகுல்ஜியையும் காரில் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
தற்போது திலிப், சதீஷ், கெளதம், சுனில், விக்கி ஆகியோரையும் காவல் நிலையம் அழைத்து வந்த காவல்துறையினர், அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவத்துக்கு மூலக்காரணமாக இருந்தது தீலீப் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கடத்தப்பட்ட நியூட்டன் மற்றும் அவரது நண்பரான ராகுல்ஜி மற்றும் தப்பிச்சென்ற மேத்யூ ஆகியோர் இதுவரை எத்தனை நபர்களை ஏமாற்றியுள்ளனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் கடத்துவதற்கு பயன்படுத்திய கார், இருசக்கரம் வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்