'இன்று தொடங்கும் ஆர்.டி.ஓ. விசாரணை'... 'விசாரணை வளையத்தில் வரப்போகும் நபர்கள்'... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஆர்.டி.ஓ. விசாரணை இன்று தொடங்க இருக்கிறது.
சின்னதிரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்கிட்ட நிலையில் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் இந்த மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரேதப் பரிசோதனையின் முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இந்தநிலையில், சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரிடம் 4 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் தாய் விஜயா ஆகியோர் அளித்த அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே 5-வது நாளாக நேற்று அவரிடம் நசரத்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாகப் பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குநர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடமும் போலீசார் விசாரணை செய்தனர்.
இதையடுத்து சித்ரா உடலை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று(திங்கட்கிழமை) ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணையைத் தொடங்க உள்ளார். முதற்கட்டமாக, நடிகை சித்ராவின் பெற்றோரிடம், அதனைத் தொடர்ந்து ஹேம்நாத்தின் பெற்றோரிடமும் விசாரணையைத் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே ஆர்.டி.ஓ. விசாரணை முடிவில் மாறுபட்ட தகவல்கள் வெளியானால் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரிடமும் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறும் என்றும் தெரிகிறது. எனவே ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்த பிறகு அதனடிப்படையில் போலீசார் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
மற்ற செய்திகள்