'ராஜா சார், எங்களுக்கு ஒண்ணும் வேண்டாம்'... 'இத மட்டும் நீங்க செஞ்சா போதும்'... ஹெச்.ராஜாவிடம் பெண்கள் கண்ணீர் விட்டதால் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காரைக்குடி அருகே பனம்பட்டியில் பிரச்சாரத்துக்குச் சென்ற பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவிடம் பெண்கள் கண்ணீர் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக தேர்தல் நெருங்கும் நிலையில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா நேற்று காரைக்குடி அருகே நென்மேனி, அண்டக்குடி, செங் கத்தான்குடி, மிதிராவயல், சிறுகவயல், பனம்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது ஹெச்.ராஜாவிடம் கும்பலாக வந்த பெண்கள், 'எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்; மதுக்கடையை அகற்றினால் போதும்', எனக் கண்ணீர் மல்க முறையிட்டார்கள். ‘எங்கள் பகுதியில் உள்ள மதுக்கடையால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள் தினமும் குடித்துவிட்டு வந்து பெண் கள், குழந்தைகளை அடிக்கின்றனர். இதனால் பல கட்ட போராட்டம் நடத்தி மதுக்கடையை அகற்றினோம். அதன்பிறகு மீண்டும் அதே இடத்தில் மதுக்கடையை வைத்து விட்டனர்'. எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்கள்.
இதையடுத்து மதுக்கடையை அகற்ற உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக ஹெச்.ராஜா தெரிவித்தார். மேலும் பிரச்சாரத்தின்போது ஹெச்.ராஜா பேசியதாவது, வீடு இல்லாதவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகப் பிரதமர் வீடு திட்டத்தில் தமிழகத்தில் 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. விறகு அடுப்பில் சமைப்பதால் புற்றுநோய் உருவாகும்.
அதற்காகத்தான் சமையல் எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம். மேலும் இந்த தேர்தல் அறிக்கையில் 6 சிலிண்டர்கள் இலவசமாகத் தருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். பெண்களின் ஆரோக்கியத்தை காப்பதில் பிரதமரும், முதல்வரும் முனைப்பாக உள்ளனர், என்று பேசினார்.
மற்ற செய்திகள்