“எனக்கு அமைச்சர் லெவல்ல பழக்கம் இருக்குங்க...! - 'கொரோனா' மருந்து வாங்க... எந்த 'ஆவணமும்' இல்லாமல் வந்த டிப்-டாப்’ ஆசாமியால் பரபரப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அமைச்சருக்காக பணி புரிந்ததாக கூறிக்கொண்டு ஒருவர் ரெம்டெசிவர் மருந்தை பெற்றுக்கொள்ள வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் இயன்முறை மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை துவங்கப்பட்ட நிலையில், ’டிப்-டாப்’ உடை அணிந்த ஒருவர் அவரது உதவியாளருடன் திடீரென உள்ளே வந்தார்.
சுமார் 300-க்கும் அதிகமான மக்கள் மருந்துக்காக காத்திருந்தாலும், முதலில் வருபவருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல் 50 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது.
ஆனால், எந்த டோக்கனும் பெறாமல் அந்த நபர் தன்னை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்று சொல்லிக்கொண்டு போலீசார் ஒத்துழைப்புடன் உள்ளே சென்றதாக அங்கு இருந்த மக்கள் கூறுகின்றனர்.
அவரிடம் மருந்து வாங்குவதற்கான முறையான எந்த ஆவணமும் இல்லை என்று, மருந்து வழங்குவதற்கு அங்கிருந்த அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், தனக்கு பல பிரபலங்களையும் அரசியல் ஆளுமைகளையும் தெரியும் என்று கூறிக்கொண்டு மருந்து தருமாறு இடையூறு செய்து நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கிருந்த மக்களுக்கு மருந்துகள் வழங்கப்படுவதில் தொய்வு ஏற்பட்டது.
அவரது பேச்சு எதுவும் எடுபடாத நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல், தம்பி மனைவிக்கு தான் மருந்து வாங்க வந்ததாக கூறிக்கொண்டு மருந்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவரிடம் முறையான எந்த ஆவணமும் இல்லாததால் மருந்து வழங்க அங்கிருந்த அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அமைச்சர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் எவருமே காவல்துறை சம்மந்தப்பட்ட விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், உயிர் காக்கும் கொரோனா மருந்தை சில இடைத்தரகர்கள் ப்ளாக்கில் விற்கும் திட்டத்துடன் இந்த மாதிரியான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். எனவே இவர்களை பிடித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அங்கு ரெம்டெசிவர் மருந்துக்காக காத்திருந்த கொரோனா நோயாளுகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்