"ரஜினியோட ‘அந்த’ அறிக்கையில ‘இந்த’ பாராவ கவனிச்சீங்களா?".. ஆடிட்டர் குருமூர்த்தியின் வைரல் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்25 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த வருடம் கட்டாயமாக அவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என அவரே கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் ஹைதராபாத்தில் அவர் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பின்போது, படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதே சமயம் ரஜினிக்கு கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்தது. ஆனாலும், உயர் ரத்த அழுத்தம் காரணமாக, ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் ரஜினி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் உடல் நிலை சீராகியதாகவும், மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ரஜினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ ரீதியாக ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது, என்னுடைய மாற்று சிறுநீரகத்தை அது கடுமையாக பாதிக்கும்.
ஆகையால் மருத்துவர்களின் அறிவுரைப்படி மூன்று நாட்கள் மருத்துவமனை கண்காணிப்பில் இருக்க வேண்டியிருந்தது. எனினும் என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு பல கோடி ரூபாய் நஷ்டம் இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல்நிலை இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாக தான் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், தன்னால் அரசியலுக்கு வர முடியவில்லை, கொரோனா காலத்தில் தன்னை நம்பி வருபவர்களுக்கு சங்கடமும், பொருளாதார சிக்கலும், மன உளைச்சலும் நேரிடும் என்றும், ‘கண்டிப்பாக வருவேன்’ என்று கூறிய ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால், நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பதற்காக தன்னை நம்பி வருபவர்களை தான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார். ஆகவே, “எனது இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கும், என்னை மன்னியுங்கள்” என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி தனது உடல் நிலை காரணாமாக இந்த முடிவெடுத்துள்ளதால் ரசிகர்கள் தங்கள் மனதை தேற்றிக் கொள்கின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவதை மிகவும் ஆதரித்தவர் ஆடிட்டர் குருமூர்த்தி. அவர் ரஜினியின் இந்த அறிக்கை குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில், “ரஜினிகாந்தின் இந்த முடிவு தவிர்க்க முடியாதது. ஆனால் அவர் கூறியதன் இறுதி பாராவைப் கவனித்தீர்களேயானால் ஒன்று புரியும்.
After @rajinikanth health set back he told me he about his decision. It was inevitable. But read the penultimate para of his statement saying without directly in politics he will serve the people of Tamil Nadu. In my assessment he will make a political impact on TN. Like in 1996 https://t.co/ukjLL5VO73
— S Gurumurthy (@sgurumurthy) December 29, 2020
அவர் தமிழக மக்களுக்கு அரசியலில் நேரடியாக இல்லாமலேயே சேவை செய்வார். எனது கணிப்புப் படி, 1996 போல அவர் தமிழ்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்று தெரிவித்துள்ளார். ரஜினி தமது அறிக்கையின் கடைசி பாராவில், “தேர்தல் அரசியலுக்கு வராமல், மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்