‘VJ சித்ரா’ மரணத்துக்கு காரணம் ‘வரதட்சணை கொடுமையா?’.. ஒருவழியாக முடிந்த RDO விசாரணை.. அவிழுமா மர்ம முடிச்சுகள்? தயாரான 250 பக்க ‘பரபரப்பு’ அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்து ஆர்டிஓ அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் 250 பக்கங்களில் ஆர்டிஓ அறிக்கையானது தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சென்னை தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நள்ளிரவில் பிரபல தனியார் தொலைக்காட்சியின், பிரபல தொடரில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருடைய பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு சித்ராவின் கணவர் ஹேமந்த்தை விசாரித்து வந்தனர்.
ஆனால் சித்ரா குளிக்கச் சென்றபோது, ஹேமந்த்தை வெளியே செல்ல கோரியதாகவும் அதனால், தான் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்து கதவைத் திறந்தபோது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், ஹோட்டல் ஊழியர் கணேஷின் உதவியுடன் அறையைத் திறந்து பார்த்தபோது சித்ரா தற்கொலை செய்துகொண்டிருந்ததாக ஹேமந்த், நசரத் பேட்டை காவல் நிலைய விசாரணையின் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
இதனிடையே சித்ராவின் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில், அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது உறுதியானது. எனினும் சித்ராவுடன் நடித்த நடிகர்கள், பழகிய நண்பர்கள் மற்றும் சித்ராவின் தாயார் உள்ளிட்டோர் சித்ராவின் கணவர்தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆன நிலையில் வரும் பிப்ரவரியில் இருவருக்கும் திருமணம் நடத்த பெரியோர்கள் முடிவு செய்திருந்ததாகவும், அதே சமயம் தாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் ஹேமந்த் விசாரணையில் கூறியிருந்தார்.
இன்னொருபுறம் சித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆர்டிஓ விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையின்போது சித்ராவின் பெற்றோர், ஹேமந்தின் பெற்றோர், சக நடிகர் ,நடிகையர் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வந்தனர். அதேசமயம் சித்ராவின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நசரத்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் ஹேமந்த்தை விசாரித்தனர்.
அந்த விசாரணை முடிவில் ஹேமந்த் சில வாக்குமூலத்தை கொடுத்தார். அந்த வாக்குமூலத்தின்படி ஹேமந்த் சித்ராவின் நடிப்புத் துறையில் அவர் யாருடன் நெருக்கமாக நடிக்கிறார் என்பது போன்ற சந்தேகக் கேள்விகளை எழுப்பி தொந்தரவு கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிய வந்ததை அடுத்து ஹேமந்த்தை கைது செய்த நசரத்பேட்டை போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
ஆனால், ஹேமந்த்தை அழைத்து விசாரிக்க பொன்னேரி கிளை சிறை நிர்வாகத்திடம் ஆர்டிஓ அனுமதி கேட்டு கடிதம் எழுதிய பின், ஹேமந்த்தையும் விசாரித்தது. இதனை அடுத்து நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக விசாரணை அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஆர்டிஓ தீவிரமாக ஈடுபட்டது. இன்று சித்ராவின் உதவியாளர் ஆனந்திடம் அதிகாரி திவ்யஸ்ரீ மேற்கொண்ட விசாரணையை அடுத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சித்ராவின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் செய்த விசாரணை நிறைவு பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பான 250 பக்க அறிக்கையை இன்று ஆர்டிஓ அதிகாரி திவ்யஸ்ரீ தாக்கல் செய்கிறார். சித்ராவின் மரணத்திற்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்கிற தொடர் சந்தேகம் கேள்விகள் இருந்து வந்தன. ஆனால் சித்ராவின் மரணத்திற்கு வரதட்சணை கொடுமை காரணமில்லை, வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என்று ஆர்டிஓ அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது, சித்ராவின் மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட 15 பேரின் வாக்குமூலங்கள் அடங்கிய எழுத்துப்பூர்வமான விசாரணை அறிக்கை என்பதும் இதில் அனைவரும் கையொப்பமிட்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்திருந்தாலும் சித்ராவின் உறவினர்களிடம் மட்டுமே அதிக அளவில் விசாரணை நடந்திருப்பதாகவும், இந்த விசாரணை தொடர்பான இந்த 250 பக்க அறிக்கையை நாளை பூந்தமல்லி போலீசாரிடம் ஆர்டிஓ அதிகாரி திவ்யஸ்ரீ ஒப்படைப்பார் என்றும் தெரிகிறது.
தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்