'டாஸ்மாக்ல விக்குறது அந்த கறியா..?'.. பரவிய வீடியோ.. பதறிய குடிமகன்கள்.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கில் முயல் கறி என்கிற பெயரில் எலி கறி போடப்படுவதாக வெளியான வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

'டாஸ்மாக்ல விக்குறது அந்த கறியா..?'.. பரவிய வீடியோ.. பதறிய குடிமகன்கள்.. பரபரப்பு சம்பவம்!

இப்பகுதியைச் சேர்ந்த முருகன், வயல்களில் உள்ள எலிகளைப் பிடித்து, மேற்பனைக்காடு, பெரியாளூர் உள்ளிட்ட டாஸ்மாக் பார்களுக்கு கொடுப்பதாகவும், அங்கு எலிக்கறியை முயல் கறி என்று கூறி விற்பனை செய்வதாகவும் வெளியான 1 நிமிட வீடியோவில் தோலுரிக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட எலிகள் காட்டப்பட்டன.

இதனால் இந்த வீடியோ வைரலாகி வயிற்றை கலங்கச் செய்தது. இந்நிலையில் புதுக்கோட்டை உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு, இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் பற்றி ஆய்வு செய்ததாகக் கூறியுள்ளார்.

அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பார் இல்லை என்பதும், டாஸ்மாக் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்ட ரமேஷ், குறிப்பிட்ட அந்த வீடியோவை வெளியிட்ட ஆயிங்குடியைச் சேர்ந்த சுரேஷை விசாரித்தபோது, தம் வயலில் எலி பிடிப்பதற்காக முருகனை அழைத்தபோது, அவர் வராமல் பக்கத்து ஊரில் எலி பிடித்துக் கொண்டிருந்ததால் முருகன் மீது கோபத்தில், விளையாட்டாக அப்படி ஒரு வீடியோவை போட்டதாகவும், ஆனால் அது உண்மையான தகவல் இல்லை என்றும் சுரேஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுபற்றி பேசிய முருகன், எலி பிடிப்பதே தம் தொழில் என்றும், ஆனால் அதை, தான் டாஸ்மாக் கடைகளுக்கெல்லாம் சப்ளை செய்வதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்ததை அடுத்து, விளையாட்டாக பதிவிடப்பட்ட இந்த வீடியோவால் உருவான இத்தகைய விளைவு காரணமாக சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

TASMAC, FOOD