“வரலாற்று நிகழ்வாக மாறிய பிரம்மாண்ட ராமர் கோவில் பூமி பூஜை!”.. இன்று அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி! - கோயில் எப்படி இருக்கும்? சிறப்பு தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை இன்று(ஆகஸ்டு 5) நடக்கிறது.

“வரலாற்று நிகழ்வாக மாறிய பிரம்மாண்ட ராமர் கோவில் பூமி பூஜை!”.. இன்று அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி! - கோயில் எப்படி இருக்கும்? சிறப்பு தகவல்கள்!

120 ஏக்கர் பரப்பளவில் 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த கோவில் 161 அடி உயரத்தில், 84,000 சதுர அடி கட்டுமான அளவில் அமைக்கப்படவுள்ளது. கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலை அடுத்து உலகின் 3வது பெரிய பரப்பளவுள்ள கோவிலாக ராமர் கோவில் உருவாவது குறிப்பிடத்தக்கது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.‌ சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து ராமர் பிறந்த அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்கிற, இந்துக்களின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறியது.

விசுவ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் நீண்ட கால முயற்சிகள் மற்றும் போராட்டம் காரணமாக முடிவுக்கு வந்த இந்த வழக்கை அடுத்து ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்கிற பெயரில் மத்திய அரசு நிறுவிய அறக்கட்டளையின் கீழ் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டுவது முடிவு செய்யப்பட்டது.

இந்த அறக்கட்டளை சார்பில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதியான இன்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவதற்கான முடிவு செய்யப்பட்டது. இதில் ஏராளமான தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். சுமார் 175 பேருக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழின் பெயரில் ராமர் கோவில் பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் ராமஜென்ம பூமியில் நேற்று முன்தினம் முதலே தொடங்கப்பட்டன.

இதில் சிறப்பு விமானம் மூலம் டெல்லியிலிருந்து லக்னோ வந்து அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி கிளம்பும் பிரதமர் மோடி சாஹேத் கல்லூரி மைதானத்தில் இறங்கி அங்குள்ள அனுமன்ஹார்கி கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு பின்னர் 12 மணிக்கு ராமஜென்மபூமிக்கு சென்று அங்குள்ள ராம்லல்லா (குழந்தை ராமர்) கோவிலில் வழிபாடு செய்து, பின்னர் அங்கு மரக்கன்றை நட்டு வைக்கிறார். இதனையடுத்து 12.30 மணி அளவில் ராமர் கோவில் பூமி பூஜையில் இணைந்து பிரம்மாண்ட ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதனுடன் பின்னர் விழாவின் நினைவாக சிறப்பு தபால் தலைகளையும் அவர் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.

இதனை ஒட்டி சரயு நதிக்கரை, நகர வீதிகள், ராம ஜென்மபூமி சுற்றுவட்டாரங்களில் மாவட்டம் முழுவதும் ராமாயணக் காட்சிகள், இராமபிரானின் படங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் கோல அலங்காரங்கள், வண்ண விளக்குகள், இரவுகளில் அகல் விளக்குகள் என அயோத்தி முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதந்து வருவதும் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது மூலமாக பாரதிய ஜனதாவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்