'அவங்க முன்ன வச்சு அடி வாங்கினப்போ மனசே ஒடஞ்சு போச்சு...' 'வீட்டு வாடகை தரலன்னு போலீஸ் அடிச்சதால...' - தீக்குளித்த நபர் மரணம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டு வாடகை கொடுப்பது தொடர்பாக ஒருவர் தீக்குளித்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த நாள் முதல் பல ஊரடங்குகளை மக்கள் பார்த்து விட்டனர். தற்போது ஊரடங்குகள் தளர்த்தப்பட்ட போதும், இயல்பு வாழ்க்கை திரும்ப முடியாத பல தரப்பட்ட மனிதர்கள் தங்களின் வாழ்க்கை முறையை மீட்டெடுக்கும் முயற்சியில் தான் உள்ளனர் எனலாம்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே விநாயகபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் சொந்த வீடு கட்டி அதை வாடகைக்கும் விட்டுள்ளார். இவரது வீட்டில் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்யும் சீனிவாசன் என்பவரும் அவரது மனைவி மற்றும் மகள் வாழ்ந்து வந்துள்ளனர்.
மேலும் கொரோனா தாக்கத்தால் வருமானம் இன்றி தவித்து வரும் சீனிவாசன் மூன்று மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வாடகை தரவில்லை என்றால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்து உள்ளார். ஆனால் சீனிவாசன் வேலைக்கு சென்றதும் பணத்தை திருப்பி தருவதாக கெஞ்சியுள்ளார். வாடகை பணமும் தராமல், வீட்டையும் காலி செய்ய மறுத்த சீனிவாசன் மீது கோபமடைந்த வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், புழல் பகுதி காவல் ஆய்வாளர் பென் சாம் நேற்று சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணையின் போது ஆய்வாளர் பென் சாம் சீனிவாசன் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அவரது மனைவி மற்றும் மகள் முன்னால் சீனிவாசனை தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக மனம் உடைந்த சீனிவாசன் அவரது வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சீனிவாசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் 85 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது சீனிவாசன் அளித்த மரண வாக்குமூலத்தில் காவல் ஆய்வாளர் தாக்கியதில் மனமுடைந்து தீக்குளித்ததாக தெரிவித்துள்ளார். சீனிவாசன் அளித்த வாக்குமூலத்தின் படி காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் புழல் காவல்நிலைய ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து மேல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தன் வாழ்வாதாரத்தை இழந்த ஒருவர் அவமானம் தாங்காமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரின் குடும்பத்தாரையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்