‘கொலைக்கு கூலி ரூ.50,000, அட்வான்ஸ் ரூ.10,000’.. ஹோட்டல் ஓனருக்கு நடந்த கொடுமை.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆலங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

‘கொலைக்கு கூலி ரூ.50,000, அட்வான்ஸ் ரூ.10,000’.. ஹோட்டல் ஓனருக்கு நடந்த கொடுமை.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவர் நேற்றிரவு ஹோட்டலில் இருந்து பைக்கில் வீடு திரும்பும்போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஹோட்டலை முன்னதாக சுரேஷின் சகோதரர் முருகேஷ் என்பவர் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அப்போது முருகேஷின் மனைவி ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உயிரிழந்த முருகேசனின் மனைவியின் சகோதரர் சரவணன், தனது தங்கையின் இரு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் தனது தங்கையின் இறப்புக்கு மாமியார் ஜானகிதேவியின் கொடுமைதான் காரணம் என சரவணன் எண்ணியுள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையை அணுகியுள்ளார். ஜானகிதேவியை கொலை செய்வதற்காக 50 ஆயிரம் கூலி பேசி அதில், 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஹோட்டலை முருகேஷின் சகோதரர் சுரேஷ் என்பவர் நிர்வகித்து வந்துள்ளார். இந்த ஹோட்டலை உயிரிழந்த தனது தங்கையின் குழந்தைகள் பெயரில் எழுதி வைக்க வேண்டும் என சரவணன் அடிக்கடி பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் சரவணனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியாயுள்ளது.

அதில் தனது தந்தை இறந்த பிறகு தங்கையை மிகவும் பாசமாக சரவணன் வளர்த்துள்ளார். பின்னர் தங்கைக்கு அவரே திருமணம் முடித்து வைத்துள்ளார். ஆனால் மாமியரின் கொடுமை தாங்காமல் தங்கை தற்கொலை செய்ததால் மனமுடைந்து போயுள்ளார். அதனால் மாமியார் ஜானகிதேவியை கொலை செய்ய முடிவெடுத்து, அதற்காக கூலிப்படையை அணுகியுள்ளார். ஆனால் கூலிப்படை முயற்சித்தபோது அவர் சிக்கவில்லை.

இதனால் தான் தங்கையை இழந்து தவிப்பதுபோல அவர் மகனை இழந்து தவிக்க வேண்டும் என சுரேஷை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி ஹோட்டலில் இருந்து வீடு திரும்பிய சுரேஷை கூலிப்படையினர் வழிமறித்து கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணை தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சரவணனை கைது போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படையினரை தேடி வருகின்றனர்.

CRIME, MURDER, POLICE, PUDUKKOTTAI