'தம்பி என்ன விடுங்க, நான் தான் 'அமைச்சர்'...'சைக்கிளில் வந்ததால் மடக்கிய போலீசார்'... பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆய்வு செய்வதற்காக சைக்கிளில் வந்த அமைச்சரை, அவர் அமைச்சர் என தெரியாமல் போலீசார் மடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக புதுவையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவையின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டு, காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எல்லை பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தனியாக தனது சைக்கிளில் சென்றார். அப்போது கரிமேடு பகுதியில் உள்ள மாநில எல்லை பகுதியில் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அங்கு சைக்கிளில் சென்ற அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். டிராக் சூட், டி-சர்ட் அணிந்து சைக்கிளில் வந்ததால், போலீசாருக்கு அவர் அமைச்சர் என தெரியவில்லை.
இதையடுத்து தன்னை புதுச்சேரி அமைச்சர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் மேற்கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் அவரை அனுமதித்தனர். இதன்காரணமாக சோதனை சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.