புதுச்சேரி : சோகத்தில் ஆழ்த்திய லட்சுமி யானை -யின் மரணம்.!.. பாகன் சக்திவேலின் உருக்கமான கோரிக்கையை ஏற்ற அமைச்சர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் ஓய்வில் இருந்த யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து மரணம் அடைந்தது.
கடந்த 1996ம் ஆண்டு இக்கோவிலுக்கு அழைத்துவரப்பட்ட லட்சுமி யானை புதுச்சேரி பக்தர்களுக்கு பிடித்தமான யானையாகவும் இருந்து வந்துள்ளது. அண்மை காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் லட்சுமி யானை நடை பயிற்சியின் போது மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தது.
யானை லட்சுமியின் மரணத்தால் மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் யானையின் உடலுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். யானையின் உடல் வனத்துறைதக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த லட்சுமி யானைக்கு பக்தர்கள், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுவை முன்னாள் முதல்வர் நாரயணசாமி உள்ளிட்டோரும் நேரில் வந்து கண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த இறப்பில் மிகவும் ஆழ்ந்த சோகத்தில் இருப்பது யானையை 26 ஆண்டுகளாக குழந்தை போல் வளர்த்த பாகன் சக்திவேல்தான். யானையின் பிரேதம் புதைக்கப்பட்ட இடத்தில் கதறி அழுத சக்திவேலை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் யாராலும் முடியவில்லை. கதறி அழுத சக்திவேல் லட்சுமி இல்லாமல் இனி நான் எப்படி வாழ போகிறேன் என்றும் அழுதார். அவரது கண்ணீரைத் துடைக்க இப்போது லட்சுமியின் தும்பிக்கை இல்லை என்பது தான் மீளாத்துயரம்.
மேலும் தனக்கு ஒரே ஒரு கோரிக்கை தான் என்று குறிப்பிட்ட பாகன் சக்திவேல், “பெண் யானைக்கு தந்தம் இருப்பது மிகவும் அரிதான ஒரு விஷயம். அந்த தந்தத்தை பிரேத பரிசோதனையில் அறுத்து எடுத்து விட்டதாக சொன்னார்கள். ஆனால் அதை பதப்படுத்தி மணக்குள விநாயகர் சந்நிதியில் வைக்க வேண்டும்” என்று கூறி தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டு இருந்தார்.
இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், "யானை லட்சுமிக்கு கல்லறை அமைத்து, கற்சிலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். லட்சுமி யானையின் தந்தம் கேரளாவில் உள்ள கோயில்களில் பராமரிப்பு செய்வது போல் அலங்கரிக்கப்பட்டு மணக்குள விநாயகர் கோவிலிலேயே வைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்