Vijay வீட்டுக்கு நேரில் போன புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. நீண்ட நேரம் நடந்த ஆலோசனை.. பின்னணி
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: சென்னை நீலாங்கரை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜய்யை புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கம்'
சென்னை நீலாங்கரை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜய்யை புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் 'விஜய் மக்கள் இயக்கம்' நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் கண்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல முனைப்போட்டி:
அதேபோல், பிரச்சாரத்தின் போது, விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவை பயன்படுத்தலாம் என்று நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் ஆட்டோ சின்னம் கேட்டிருந்தும் அந்த சின்னம் தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல முனைப்போட்டி நிலவுகிறது.
ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்பு:
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜய்யை புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமி இன்று இரவு 7 மணியளவில் சந்தித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து உரையாடினார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
ஆயினும், விஜய் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தரப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நடிகர் விஜயை புதுச்சேரி முதல்வர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்