My India Party

‘ஒன்பது மாதங்களுக்குப் பிறகு’... ‘நாளை முதல் அனுமதி’... ‘பொதுமக்கள் இதை செய்யாவிட்டால் அபராதம்’...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸால் அனுமதி மறுக்கப்பட்ட மெரினா கடற்கரைக்கு நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

‘ஒன்பது மாதங்களுக்குப் பிறகு’... ‘நாளை முதல் அனுமதி’... ‘பொதுமக்கள் இதை செய்யாவிட்டால் அபராதம்’...!!!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் மெரினா கடற்கரை கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதியே மூடப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிப்பதற்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகளும் மெரினா கடற்கரையை ஏன் தொடர்ந்து மூடி வைத்திருக்கிறீர்கள்? என்று சென்னை மாநகராட்சிக்கு கேள்வியை எழுப்பியதுடன், இதற்கு உரிய முடிவு எடுக்காவிட்டால் நாங்களே மெரினா அனுமதிக்கு உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை டிசம்பர் 14-ந் தேதி திறப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.இதன்படி நாளை மெரினா கடற்கரை மக்களின் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்படுகிறது. 9 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு நாளை பொது மக்கள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் கடற்கரைக்கு வருபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். இதனை நாளை முழுமையாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகர போலீசாருடன் இணைந்து செயல்பட மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நாளை மெரினா கடற்கரையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கடற்கரையில் சர்வீஸ் சாலையில் உள்ள போலீசாரின் தடுப்புவேலிகள் அகற்றப்படுகின்றன. சர்வீஸ் சாலை சுத்தம் செய்யப்படுகிறது. மழையால் மணல் பரப்பில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. மெரினா கடற்கரை திறக்கப்பட்டாலும், மெரினாவில் எளிய மக்களுக்குப் பயனுள்ளதாகவும், ஏழை வியாபாரிகளுக்கு வாழ்வாதாரமாகவும் இருந்த சிறு தள்ளுவண்டிக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

மாநகராட்சி மூலம் 900 சிறு தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கும் பணி நடந்து வருவதால் மெரினா தற்சமயம் வெறிச்சோடிதான் இருக்கும். மெரினாவில் தினமும் நடைபயிற்சி செய்பவர்களும் நாளை முதல் அனுமதிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் கடந்த 9 மாதங்களாக களை இழந்து காணப்பட்ட மெரினா கடற்கரை மீண்டும் வழக்கம் போல பரபரப்பாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்