'என்ன... தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இவ்வளவு கடன் இருக்கா'!?.. நிதி அமைச்சர் பிடிஆர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் உள்ள கடன் சுமை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

'என்ன... தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இவ்வளவு கடன் இருக்கா'!?.. நிதி அமைச்சர் பிடிஆர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கடந்த 2001ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பில் இருந்து இறங்கியபோது, கடன் அளவு ரூ.34,540 கோடியாக இருந்தது. அதே ஆண்டு, அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், ஆகஸ்டு மாதம் 18ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று, நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டது.

2006ம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிவடையும்போது, கடன் அளவு ரூ.63,848 கோடியாக அதிகரித்தது. அடுத்து, 2011ம் ஆண்டு திமுக ஆட்சி நிறைவடையும்போது, கடன் அளவு 1.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிறகு, 2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் கடன் அளவு ரூ.2.28 லட்சம் கோடியாக கூடியது.

2016ம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த நிலையில், 2021-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் கடன் அளவு 4.85 லட்சம் கோடியாக அதிகரித்தது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், இடைக்கால பட்ஜெட்டை அதிமுக தாக்கல் செய்தபோது, தமிழகத்தின் கடன் அளவு ரூ.4,85,502 கோடியே 54 லட்சம் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் அளவு ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் என்றும் அப்போதே தெரிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் கடன் அளவு 1,305 சதவீதம் அதிகரித்துள்ளது. மடங்கில் கணக்கிடும்போது 13 மடங்கு உயர்ந்திருக்கிறது.

தற்போதைய நிலையில், கொரோனா பாதிப்பால் அரசுக்கு வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவு அதிகரித்துள்ளது. எனவே, கடன் அளவு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற திமுக முதலில் அரசின் நிதி நிலையை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தது. அப்போதே, விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், கவர்னர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை. இந்த நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு 2001ம் ஆண்டு வெள்ளை அறிக்கையானது, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெளியிடப்பட்டது. ஆனால், இந்த முறை பொது வெளியில் பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்காக தலைமைச் செயலகம் வந்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அங்கு 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். முதலமைச்சர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது என அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை தயார் செய்யப்பட்டது. தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2 மாதங்கள் கொரோனா 2வது அலை தடுப்பு பணியில் போய் விட்டது. மற்ற வெள்ளை அறிக்கைகளை விட கூடுதல் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

முந்தைய ஆட்சியில் பெறப்பட்ட கடனால் ஏற்பட்ட சிக்கல்களை விளக்கியுள்ளேன். தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை 3.16 சதவீதமாக ஆக உள்ளது. தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்துள்ளது. 2006-2011 திமுக ஆட்சியில் அரசின் வருமானம் உபரியாக இருந்தது.

வருமானம் இல்லாத அரசாங்கம் எந்த பிரச்சினையை சந்திக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்து விட்டது.

ஒன்றிய அரசின் வரிப்பங்கீட்டில் தமிழ்நாட்டின் பங்கு முழுமையாக வந்துசேரவில்லை. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமையாக இதை செய்கிறோம்.

முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறேந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் கடன் சுமை உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்