சென்னை கல்லூரியில்... ஆசிரியை மரணத்தில்.. சிக்கிய பேராசிரியர்... கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் அரசுப் பள்ளி ஆசிரியை, தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக கல்லூரி பேராசிரியர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கல்லூரியில்... ஆசிரியை மரணத்தில்.. சிக்கிய பேராசிரியர்... கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

திருவள்ளூர் மாவட்டம் காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹரி சாந்தி (32). இவர், 5 வருடங்களுக்கு முன்பு, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தெலுங்குப் பிரிவில் பணியாற்றி வந்தார். ஹரிசாந்தி பணியாற்றிய தெலுங்குப் பிரிவில், அவருடன் நடராஜ் என்ற பேராசிரியரும் பணிபுரிந்து வந்துள்ளார். இருவரும் முனைவர் பட்டம் ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு ஒரே கல்லூரியில் வேலைப் பார்த்து வந்ததால், அங்கேயும் இருவரும் தங்களது காதலை தொடர்ந்துள்ளனர்.

இதற்கிடையில் ஹரி சாந்தி அரசுப் பள்ளி ஆசிரியையாக பெரம்பூரில் வேலை கிடைத்து சென்று விட, இருவருக்கும் இடையில் பழக்கம் குறைந்துள்ளது. இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர், தனது உறவினர் பெண்ணை நடராஜ் திருமணம் செய்து கொள்ள, ஹரி சாந்தி வேறு திருமணம் செய்து கொள்ளாமல் நடராஜூடன் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். அவ்வப்போது கல்லூரிக்கு வந்து நடராஜை சந்திப்பதை வழக்கமாக கொண்ட அவர், தன்னை 2-வதாக திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் இதற்கு நடராஜ் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த புதன்கிழமையன்றும் நடராஜை சந்திக்க கல்லூரிக்கு வந்துள்ளார் ஹரிசாந்தி. கல்லூரி நேரம் முடிந்த பிறகும் இருவர் மட்டும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக நடராஜிடம், ஹரி சாந்தி சண்டைப் போட்டுள்ளார். மேலும் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள ஹரி சாந்தி அப்போதும் தொந்தரவு செய்ததாக கூறியுள்ள நடராஜ், தனது கையை அறுத்துக் கொண்டு ஹரி சாந்தி மிரட்டியதால், தான் அங்கிருந்து அப்போதே புறப்பட்டு சென்றுவிட்டதாக வாக்குமூலத்தில் நடராஜ் தெரிவித்துள்ளார்.

போகும்போது ஹரிசாந்தி  வகுப்பறைக்குள் இருக்கும் தகவலை வெளியில் இருந்த பாதுகாவலர்களிடமும் தெரிவிக்காமல் சென்ற நடராஜ், செல்ஃபோனையும் சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த ஹரி சாந்தி, தான் கல்லூரி வகுப்பறையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நடராஜின் செல்ஃபோனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு, வகுப்பறைக்குள்ளேயே துப்பட்டாவை கொண்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காலையில் எஸ்எம்எஸை பார்த்துவிட்டு நடராஜ் வந்து பார்க்கையில், ஹரிசாந்தி தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும் இந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாகப் பேராசிரியர் நடராஜ் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

SUICIDE, TEACHER, PROFESSOR