'தமிழகத்தை உலுக்கிய கொடூரம்'... 'கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்'... நீதிபதிகளிடம் கதறிய அழுத பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தவறுதலாகக் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், தனக்கு நேரும் கொடுமைகள் குறித்து நீதிபதிகளிடம் அந்த பெண் கதறியுள்ளார்.

'தமிழகத்தை உலுக்கிய கொடூரம்'... 'கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்'... நீதிபதிகளிடம் கதறிய அழுத பெண்!

கடந்த 2018ம் ஆண்டு சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்குத் தவறுதலாக எச்.ஐ.வி. தொற்றுடன் ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிவகாசி அரசு மருத்துவமனையில் தானமாகப் பெற்ற ரத்தத்தை முறையாகப் பரிசோதிக்காதது தான், இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரையைச் சேர்ந்த அப்பாஸ்மந்திரி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாகத் தாக்கல் செய்த மனுவில், ''பாதுகாப்பான முறையில் ரத்ததானம் பெற உபகரணங்களை வழங்கவும், தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்குக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இது அவரது 2-வது குழந்தையாகும். அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில், எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சத்தை இழப்பீடாகத் தமிழக அரசு வழங்க வேண்டும். அதில் 10 லட்சம் ரூபாயை அந்த பெண்ணின் பெயரில் தேசிய வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.

மீதமுள்ள 15 லட்சம் ரூபாயை மைனர்களான அவருடைய 2 பெண் குழந்தைகள் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 450 சதுர அடிக்கு குறையாமல் 2 படுக்கை அறைகளைக் கொண்ட சுற்றுச்சுவருடன் கூடிய வீடு கட்டித்தர வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்தச்சூழ்நிலையில் தற்போது தொடரப்பட்ட வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரான பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து விவரித்தார். ''தனக்கு அரசு கட்டித்தந்துள்ள வீட்டில் ஒரு படுக்கை அறை தான் உரிய வசதிகளுடன் உள்ளது. மேலும் நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னிடம் பேசினாலோ, என்னைத் தாண்டி சென்றாலோ எச்.ஐ.வி. பரவிவிடுமோ என்று பயப்படுகின்றனர்.

இதனால் வேண்டா வெறுப்பாக என்னைப் பார்க்கின்றனர். பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க என்னை அனுமதிப்பதில்லை. எனவே எனக்குத் தனியாகக் குழாய் இணைப்பை வழங்க வேண்டும்” என்று அழுது கொண்டே உருக்கமாகத் தெரிவித்தார். இதையடுத்து ''பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கையைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. வைரஸ் பாதித்தவருடன் பேசினாலோ, அவரை கடந்து சென்றாலோ வைரஸ் தொற்று ஏற்படாது என்று அந்த கிராமத்தினருக்கு மருத்துவர்கள் குழு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதேபோல இந்த பெண்ணின் கணவரும் துன்புறுத்தி வருவதாகத் தெரிவித்ததால், அவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மற்ற செய்திகள்