Neeya Naana : “ஹனிமூன் ட்ரிப்புக்கு கூட 8 நண்பர்களோடதான் வந்தாரு..!😅” - Possessive ஆன மனைவி.. டிவி நிகழ்ச்சியில் கணவருக்கு போட்ட செல்ல கண்டிஷன்ஸ்.! 😍
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சமூக அளவில் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய மற்றும் அவர்களின் சிந்தனையை தூண்டக்கூடிய விவாத நிகழ்ச்சியாக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இதில் விவாதிக்கப்படும் பல டாபிக்குகள், பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கூட பேசு பொருளாக மாறும். மேலும் இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இரு தரப்பிலான கருத்துகளையும் கேட்டுக் கொண்டு, அதில் சரியாக பாய்ண்ட்டுகளை எடுத்துரைத்து பேசுவதன் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி சில நேரம் கலகலப்பாகவும், சுவாரஸ்யம் கலந்தும் செல்லும். மறுபக்கம், தீப்பறக்கும் விவாதங்கள் கூட உருவாகி பார்ப்பவர்கள் பலரையும் கூட நிகழ்ச்சியுடன் ஒன்றி போக வைக்கும். அதே போல, சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி ஒருபுறமும், அதே வேளையில் ஜாலியான டாபிக்குகளை கையில் எடுத்து அதனை சுற்றி நடைபெறும் விவாதங்களும் நீயா நானா நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மனைவிமார் தரப்பினர் கணவரின் நட்பு வட்டம் தங்களுக்கு தொல்லையாக இருப்பதாக பேசினர். அதில் பெண் ஒருவர் தன் கணவர் தன்னுடன் நேரம் செலவிடுவதில்லை என்றும் எப்போது அவுட்டிங், டின்னர் சென்றாலும் நண்பர்களுடன் செல்கிறார், அல்லது நாங்கள் போகும்போது நண்பர்களும் வந்துவிடுகின்றனர் என கோபிநாத்திடம் ஜாலியாக புகார் அளித்ததுடன், இத்தனைக்கும் ஹனிமூன் டிரிப் போகும்போது கூட நண்பர்கள் உடன் வந்தனர். நான் அவரிடம் தனியே பேச நினைத்தேன். இதெல்லாம் செய்ய முடியாமல் போனது என பொசசிவாக சொல்கிறார்.
இதுகுறித்து அவரது கணவரிடம் கோபிநாத் விசாரிக்கும்போது, அவரோ, “நீண்ட நேரம் பேசவும் முடியாது, அவங்களுக்கும் போர் அடிக்கும். பொதுவாக ஆபீஸ் கெட் டுகதரில் நண்பர்களுடன் செல்வேன். அதேபோல் வெளியூர், டின்னர், அவுட்டிங் செல்லும்போது நண்பர்களுடன் சென்று பழகிவிட்டேன், அது பேச்சிலராக இருந்து வந்ததால் திடீரென குடும்ப வாழ்க்கை பொறுப்புகளை எதிர்கொள்வதால் இப்படியா என தெரியவில்லை. நான் சில வேளைகளில் அவரை தனியே அழைத்துச் சென்றுள்ளேன், இருப்பினும் நண்பர்களும் உடன் வரும்பொழுது இன்னும் கொஞ்சம் போரடிக்காமல் அந்த பயணங்கள் ஜாலியாக மாறும் என்பதால் தான்” என கூறினார்.
இருவரின் பதில்களையும் பார்த்த பின்பு கோபிநாத் அந்த இளைஞரிடம், “புரிகிறது. ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்க கூடாது. குடும்ப வாழ்க்கை அனைத்தும் உணர்வுகளுக்குமானது. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். போரடித்தாலும் அவர்களின் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு, குழந்தைகளுடனும் வீட்டிலும் நேரம் செலவிட்டு அதிலேயே மகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி என கற்க வேண்டும். உங்கள் மனைவி தன் மனதில் இருப்பதையே இங்கு வெளிப்படுத்துகிறார்.!” என நெகிழ்ச்சியுடன் அட்வைஸ் செய்தார்.
மற்ற செய்திகள்