'அந்த' ப்ளட் க்ரூப் ரொம்ப ரேர்...! பிரசவ நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் போராடிய தாய், கடைசியில்...' ஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காவலரின் உதவியுடன் நிறைமாத கர்பிணி பெண்ணுக்கு தேவைப்பட்ட அரியவகை இரத்தம் அளித்து தாயையும் சேயையும் காப்பாற்றியுள்ளார் புதுச்சேரி இளைஞர்.

'அந்த' ப்ளட் க்ரூப் ரொம்ப ரேர்...! பிரசவ நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் போராடிய தாய், கடைசியில்...' ஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணான விஜயலக்ஷ்மி(25) கடந்த சில தினங்களுக்கு முன் பிரசவத்துக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட விஜயலக்ஷ்மி நிலை சிறிது மோசமடைந்துள்ளது.

இதில் சிக்கல் என்னவென்றால் விஜயலக்ஷ்மி பாம்பே ஓ குரூப்(எச்எச் பிரிவு) என கூறப்படும் அரிதான வகை ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர். ஜிப்மர் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜயலட்சுமிக்கு ரத்தம் குறைவாக உள்ளதால், பாம்பே ஓ குரூப் ரத்த வகையை ஏற்பாடு செய்யும்படி, அவரது தாய் அலமேலுவிடம் கூறியுள்ளனர்.

தன் மகளுக்கு தேவைப்படும் இரத்தத்தை ஏற்பாடு செய்ய, செய்வதறியாது தவித்த அலமேலு மருத்துவமனையில் இருந்த அனைவரிடமும், தன் மகளைக் காப்பாற்ற வேண்டி கதறி அழுதுள்ளார்.

தாயின் கதறலை பார்த்த அங்கிருந்த புதுச்சேரி ஆயுதப்படை காவலர் செல்வம், அலமேலு அம்மாவிடம் சென்று பேசியுள்ளார். அப்போது காவலர் செல்வத்திடம்  நிறை மாத கர்ப்பிணியான தனது மகளுக்கு பாம்பே ஓ குரூப் ரத்த வகையை ஏற்பாடு செய்யும்படி மருத்துவர்கள் கூறியதாகவும், என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் கூறி, தன் மகளையும் குழந்தையையும் காப்பாற்றும் அழுதுள்ளார்.

இதையடுத்து அவர்களுக்கு உதவ நினைத்த செல்வம், தனது வாட்ஸப் மூலம் கர்ப்பிணி பெண்ணுக்கு பாம்பே ஓ குரூப் ரத்த வகை தேவைப்படுகிறது என நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பலரை தொடர்பு கொண்டும் இந்த இரத்த வகையை கொண்ட ஒருவரும் இல்லை என்ற நிலையே ஏற்பட்டுள்ளது. 

இறுதியாக செல்வத்தின் நண்பர் ஒருவர் 'உயிர்துளி' என்னும் புதுச்சேரி தன்னார்வ ரத்த அமைப்பு ஒன்றின் தொடர்பு எண்ணை பரிந்துரைக்க, அதன் மூலம் புதுச்சேரியில் சந்தோஷ்(25) என்ற நபருக்கு இவ்வகை இரத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் சந்தோஷிடம் விஜயலக்ஷ்மியின் நிலையை குறித்து தெரிவித்ததையடுத்து சந்தோஷ் உடனடியாக ஜிம்பர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்

தன்னார்வலர் சந்தோஷ் ஜிப்மர் ரத்த வங்கிக்கு விஜயலக்ஷ்மிக்கு தேவைப்பட்ட பாம்பே வகை ரத்தத்தை தானமாக வழங்கினார். அதை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் விஜயலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. விஜயலட்சுமியின் தாய் அலமேலு கண்ணீருடன், ரத்த் தானம் வழங்கிய சந்தோஷுக்கும், உதவிய ஆயுதப்படை காவலர் செல்வத்துக்கும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்தார்.

ஊரடங்கு நேரத்தில் எவ்வித சிரமமும் அறியாமல், புதுச்சேரியில் இருந்து வந்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய சந்தோஷிற்கும், தாயின் கதறலை மறக்கமுடியாமல் தன்னால் முடிந்த உதவி செய்ய முயன்ற காவலரையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.