பொள்ளாச்சி வழக்கில் கைதான 5 பேர் மீதும்.. மேலும் ஒரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது மேலும் ஒரு பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வழக்கில் கைதான 5 பேர் மீதும்.. மேலும் ஒரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு..

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதனை வீடியோ எடுத்து மிரட்டி, பணம் பறித்த வந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் புகார் அளித்தார். அதன் பேரில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைதுசெய்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் அளித்த புகாரால் ஆத்திரமடைந்த, பார் நாகராஜ், பாபு, மணிவண்ணன் ஆகியோர் மாணவியின் சகோதரரைத் தாக்கினர். இதுகுறித்து மீண்டும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பார் நாகராஜ், செந்தில், பாபு ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த மணிவண்ணன் ஒரு மாதத்திற்குப் பின்னர் சரணடைந்தார்.

இந்நிலையில் திருநாவுக்கரசு உள்ளிட்ட நால்வரிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் மணிவண்ணனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரணடைந்த மணிவண்ணன் உட்பட 5 பேரிடமும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

5 பேரும் இணைந்து பல இளம்பெண்களை மிரட்டி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும், மேலும் அதனை படம்பிடித்து வைத்து தொடர்ந்து வன்கொடுமை சம்பவங்களை நடத்தியதும் தெரியவந்துள்ளது. மணிவண்ணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகள் உடன் சேர்த்து, புதிய திருப்பமாக கூடுதலாக பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதியப்பட்டிருந்தது. தற்போது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

POLLACHI, SEXUALHARASSMENT, SEXUALASSUALT