'போலி இ-பாஸ்' ரெடி செய்யும் 'கும்பல்...' 'நம்பி ஏமாந்து விடாதீர்கள்...' 'ட்ரை பண்ணா' இதுதான் 'நடக்கும்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்போலி இ-பாஸ் மூலம் சென்னையில் இருந்து வந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மரிச்சிகட்டி சோதனை சாவடியில் கொரோனா தொற்று பரவலையொட்டி வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று வருவாய்த்துறையினரும், போலீசாரும் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சென்னை அம்பத்தூரில் இருந்து வந்த வாகனம் ஒன்றினை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த இ- பாஸ் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. உடனே அந்த பாசை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அது போலி இ-பாஸ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தில் வந்த 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாம்பனில் உள்ள உறவினர் ஒருவரை பார்ப்பதற்கு சென்னையில் இருந்து வருவதாகவும், போலி பாஸ் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினர்.
இதுகுறித்து வழிமறிச்சான் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சென்னை அம்பத்தூரை சேர்ந்த 4 பேர் மீதும் பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். காரில் வந்த 4 பேரையும் அங்குள்ள பள்ளி ஒன்றில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். மேலும் போலி இ-பாஸ் தயார் செய்யும் கும்பல் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்