'சரியான நேரத்துல கொண்டு வந்துருக்கீங்க...' 'தலையில் காயத்தோடு தவித்த பாட்டி...' நடைபாதையில் அழுதுக் கொண்டிருந்த பாட்டியை காப்பாற்றிய காவல் ஆய்வாளர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெருவோரம் கிடந்த பாட்டியின் தலையில் இருந்த காயத்தில் புழு இருப்பதை பார்த்த காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ் 'உறவுகள்' கட்டளையின் உதவியால் பாட்டியை பாதுகாத்து தாற்காலிக் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ் சென்னை ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் சாலையோர ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி கொண்டிருந்த போது அருகில் சாலையில் ஒரு பாட்டி அழுதுக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். பாட்டியின் அருகில் சென்றபோது அவரின் தலையில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது.
உடனே அவர் தனக்கு தெரிந்த 'உறவுகள்' அறக்கட்டளையைச் சார்ந்த காலித் அஹமதை அழைத்து பாட்டியின் நிலைமையை குறித்து விளக்கியுள்ளார். முதலுதவி பொருட்களை கொண்டு வந்த காலித், பாட்டியின் தலையில் இருந்த காயத்தில் புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உதவி ஆய்வாளர் ராஜிடம் தெரிவித்துள்ளார். காலித் அஹமத் டர்பன்டைன் ஆயில் மூலம் அந்தப் புழுக்களை நீக்கி அவருக்கு முதலுதவி அளித்துள்ளார். பின் இருவரும் பாட்டியை குளிப்பாட்டி, வேறு உடைகள் உடுத்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் சென்னை மாநகராட்சிக் காப்பக உதவி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், பாட்டிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பாட்டியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், இவர் தற்போது இருக்கும் நிலைக்கு கண்டிப்பாக மூன்று நாள்களுக்கு ஒரு முறை மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்த பின் பாட்டி, சென்னை சௌகார்பேட்டையில் உள்ள தற்காலிக காப்பகத்தில் அனுமதித்துள்ளனர்.
ஆதரவற்ற பாட்டிக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றிய காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ் அவர்களையும், உறவுகள் அறக்கட்டளையும் அப்பகுதி மக்கள் வாழ்த்தியும் பாராட்டியும் வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் அனைவரும் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.