'போனில் இடியாய் வந்த செய்தி'... 'மனசு பூரா இருந்த துக்கத்தை மறைத்து கொண்டு ஆய்வாளர் செய்த பணி'... மனதை நெகிழவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அப்பா இறந்த செய்தி இடியாய் வந்த நிலையில், நாட்டிற்காகத் தனது முதல் கடமையை நிறைவேற்றிய காவல் ஆய்வாளரின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில், நாட்டின் 74வது ஆண்டு சுதந்திர தினம் பாதுகாப்புடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோன்று நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்தினார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு தொலைப்பேசியில் வந்த செய்தி அவரது மனதில் இடியாய் இறங்கியது. காவல் ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களின் தந்தை நாராயணசுவாமி நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அவரை அதிரச்செய்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை புறப்படத் தயாரான நிலையில், அணிவகுப்பு மரியாதையைத் தான் தான் முன்னின்று நடந்த வேண்டும் என்ற சூழ்நிலை இருப்பதாலும், முக்கியமான சுதந்திர தின நிகழ்ச்சியில் மாற்றம் செய்ய முடியாது என்பதால் அவர் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு மரியாதையை நடத்தினார்.
அணி வகுப்பை முடித்த மகேஸ்வரி உடனடியாக தனது தந்தை துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். மனதிற்குள் அவ்வளவு துயரம் இருந்தபோதும், அணிவகுப்பு நிகழ்ச்சியை எந்தவித குறைவும் இன்றி மகேஸ்வரி நடத்தி முடித்தார். அணிவகுப்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் இந்த துயர செய்தி பலருக்கும் தெரிய வந்தது. காவல்துறையில் இருக்கும் தனக்கு நாட்டிற்குச் செய்யும் தனது கடமை தான் முக்கியம் என பணியாற்றிய மகேஸ்வரியின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
மற்ற செய்திகள்