'அதுல எப்படி தற்கொலை பண்ண முடியும்'...'அங்க எப்படி காயம்?'...'ரீட்டா மரணத்தில் அதிரவைக்கும் சந்தேகங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில், கார் விற்பனை நிறுவன அதிபர் ரீட்டா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது காவல்துறையினருக்கு எழுந்திருக்கும் சந்தேகங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை சேர்மேன் ரீட்டா லங்கா, நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். நேற்று காலை ரீட்டாவின் வீட்டுக்கு சென்ற சூப்பர்வைசர் இயேசுபாதம் என்பவர் இதனை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருடைய தற்கொலைக்கு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ரீட்டாவின் முகத்தில் இரத்தக் காயங்கள் இருப்பது காவல்துறைக்கு பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மேலும் அவரது உடல் ஜன்னல் திரைச்சீலை கம்பியில் தொங்கிய நிலையில் இருந்ததும் காவல்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை வர வைத்துள்ளது.
ரீட்டா தற்கொலை செய்துகொண்ட அறையானது உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் அவரது அறையில் இருந்த 'ஃப்ரெஞ்ச் டோர்' எனப்படும் ஆளுயர ஜன்னல் தாழிடப்படமால் இருந்தது அவர்களின் சந்தேகத்தை மேலும் வலுக்க செய்துள்ளது.
இதற்கிடையே பெரும் தொழில் அதிபரான ரீட்டா, தற்கொலை செய்து கொள்வதற்கு கார் விற்பனைத் தொழிலில் ஏற்பட்ட சரிவும் ஒரு காரணம் என கூறப்படுவது குறித்தும், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே ரீட்டா எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.