தாய், மகள் மர்ம மரண வழக்கில் பரபரப்பு திருப்பம்.. தென்னந்தோப்பில் கிடைத்த ‘மங்கி குல்லா’.. தீவிரமடையும் விசாரணை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் படுகாயங்களுடன் இறந்து கிடந்த வழக்கில் முக்கிய தடயம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இந்த தம்பதிக்கு ஆலன் (வயது 25), ஆரோன் (வயது 19) என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜூம், ஆலனும் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஆரோன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதனால் வீட்டில் பவுலின் மேரிக்கு துணையாக, அவருடைய தாயார் திரேசம்மாள் (வயது 90) உடன் வசித்து வந்தார். பவுலின் மோி தனது வீட்டில் தையல் வகுப்பும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பவுலின் மேரியும், திரேசம்மாளும் வீட்டில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பவுலின் மேரி மற்றும் திரேசம்மாள் ஆகியோர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இரு பெண்கள் மட்டும் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து பயங்கர ஆயுதத்தால் தாக்கி அவர்கள் அணிந்திருந்த நகையையும் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அந்த வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் வீட்டிற்கு வெளியே இருந்த மின்சார மீட்டரை உடைத்து மின்சாரத்தை துண்டித்து விட்டுள்ளனர். பின்னர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று, அயர்ன் பாக்ஸ்சால் தாய் மற்றும் மகளை தலையில் கடுமையாக தாக்கியது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வந்தனர். தற்போது அந்த வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் இருந்து குளிர் பிரதேசத்தில் வசிப்போர் பயன்படுத்தும் மங்கி குல்லா ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து குளச்சல் உட்கோட்ட டிஎஸ்பி தங்கராமன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த வழக்கில் முக்கிய தடயமாக மங்கி குல்லா ஒன்று கிடைத்துள்ளதாகவும் அதை யாரேனும் விற்பனை செய்திருந்தாலும், இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரிந்தாலும் தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்