'கடன் வாங்குனது குத்தமா?... கொலை பண்ணிடுவோம்னு மிரட்டுறாங்க'... போலீஸார் தீவிர விசாரணை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வீடு புகுந்து கடன் பெற்றவரையும், உறவினர்களையும் கந்துவட்டி கும்பல் தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கடன் வாங்குனது குத்தமா?... கொலை பண்ணிடுவோம்னு மிரட்டுறாங்க'... போலீஸார் தீவிர விசாரணை!

சென்னை குரோம்பேட்டை நெமிலிச்சேரி துரைக்கண்ணு தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன். 53 வயதான இவர், பழைய கார் விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழில் மேம்பாட்டுக்காக, சுகுணா என்பவரிடம் இருந்து பத்து லட்ச ரூபாய் கடனாக பெற்றிருக்கிறார். முதலில் குறைந்த வட்டி என்று கூறி, பணத்தைக் கொடுத்த சுகுணா, பிறகு, பத்து லட்சத்துக்கு மாதம் 75 ஆயிரம் ரூபாய் வட்டி கட்ட வேண்டும் என்று அதிரடி காட்டியுள்ளார்.

வாங்கிய பத்து லட்ச ரூபாயையும் தொழிலில் முதலீடு செய்து விட்டதால், வேறு வழியின்றி 75 ஆயிரம் ரூபாய் வட்டியாக செலுத்த சந்திரமோகன் ஒப்புக்கொண்டார். 5 மாதங்கள் தவறாமல் பணத்தை செலுத்தி வந்த அவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தொழிலை அவரால் சரியாக கவனிக்க முடியாமல் போனது. தொழில் நஷ்டத்தில் சிக்கிய அவரால் வட்டி செலுத்த இயலவில்லை. அப்போது இருந்து பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்து வந்த சுகுணா, அவ்வப்போது தன்னை தகாத வார்த்தையில் திட்டியும் மிரட்டியும் வந்ததாகக் கூறுகிறார் சந்திரமோகன்

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர், நான்கு பேர் கொண்ட கும்பலுடன் வந்த சுகுணா, தன்னைத் தாக்கி பத்திரம் மற்றும் நிரப்பப்படாத காசோலைகளில் கையெழுத்துப் பெற்றுச் சென்றதாகச் சொல்கிறார் சந்திரமோகனின் தாயார் சந்திரா.

கந்துவட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு, பணத்தை தரவில்லை எனில் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறும் சந்திரமோகன் இது குறித்து சிட்லபாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், விசாரணையைத் தொடங்கியுள்ள காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகுணா சென்னையில் இல்லை என்றும், அவரை நேரில் அழைத்து விசாரித்த பின்னரே வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.

MONEY, USURYINTEREST, CHENNAI, THREAT