'முகத்துல எப்படி அந்த 2 காயம் வந்தது?... 'ஹோட்டல் அறையில் நடந்தது என்ன?'... புதிய கோணத்தில் செல்லும் போலீஸ் விசாரணை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரின் முகத்தில் இருக்கும் காயங்கள் பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பலரது மனதில் அந்த கதாபாத்திரமாகவே மாறிப்போனவர் டிகை சித்ரா. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னதிரை நடிகையாகப் புகழ்பெற்றார். இவரின் வீடு திருவான்மியூரில் உள்ளதால் அங்கிருந்து தினமும் படப்பிடிப்பிற்கு வர முடியாது என்பதால், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை குளிக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற சித்ரா, தற்கொலை செய்து கொண்டதாக அவரின் கணவர் ஹேமந்த் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து சென்று உடலை மீட்டார். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்ராவின் உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.
சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுதனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளது. வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன. இது புதிய சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. இந்த காயங்கள் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நேரத்தில் அவரின் கணவர் ஹேம்நாத் மட்டுமே உடனிருந்துள்ளார். இதனால் அவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சித்ராவிற்கும், ஹேம்நாத்திற்கும் ஏதாவது பிரச்சனை இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இதனிடையே சித்ரா முகத்தில் இருக்கும் காயங்கள், சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தங்களின் விசாரணையை தொடங்கியுளர்கள்.
இதனிடையே சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகும் எனவும் போலீசார் கூறியுள்ளார்கள். எனவே சித்ராவின் தற்கொலை வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
மற்ற செய்திகள்