மாவீரன் அலெக்சாண்டரை விட என்னிடம் படை பலம் அதிகம்..!- கடலூரில் பாமக நிறுவனர் காரசாரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்“மாவீரன் அலெக்சாண்டரை விட என்னிடம் படை பலம் அதிகம் உள்ளது. அன்புமணியை கோட்டையில் உட்கார வைக்க வேண்டியது இளைஞர்கள் பொறுப்பு” என பாமக தொண்டர்கள் மத்தியில் நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.
கடலூரில் இன்று பாமக சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக தொண்டர்கள் உட்பட நிறுவனர் ராமதாஸ், ஜிகே மணி, அருள் மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் அன்புமணி ராமதாஸை கோட்டை உட்கார வைக்கும் பொறுப்பு இளைஞர்கள் உடையது என ராமதாஸ் பேசினார்.
மேலும் ராமதாஸ் கூறுகையில், “இன்று பலரும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு தரக்கூடாது என குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு சரியான வகையில் மேல்முறையீடு செய்து வழக்கு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக நமக்கு சாதகமான வகையில் தீர்ப்பு கிடைக்கும் என நம்புவோம்.
நாம் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும், அன்புமணி முதல்வர் ஆக வேண்டும்.இதனால், நாம் வீடு, வீடாகச் சென்று திண்ணை திண்ணையாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். வயதானவர்கள் பேசத்தான் முடியும். இனி நம் இளைஞர்கள் தான் இனி இதற்கான வேலையைச் செய்ய வேண்டும். பாமக இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து தொகுதிக்கு 1 லட்சம் வாக்குகளை பாமக பெறும்படி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நாம் 60 இடங்களில் ஆவது வெற்றி பெற வேண்டும். 42 ஆண்டுகள் ஆக மக்களுக்காகப் பாடுபட்டு இருக்கிறேன். இங்கு அன்புமணியைப் போல ஒரு திறமையான தலைவர் யாரும் இல்லை. ஆனால், மக்கள் நம்மிடம் ஆட்சியைக் கொடுக்கத் தயங்குகிறார்கள். அன்புமணி ராமதாஸை முதல்வராக அமர வைக்க இளைஞர்கள் உழைக்க வேண்டும்.
திண்ணை பிரச்சாரமும் செய்யுங்கள், சமுக வலைதளங்களிலும் பிரச்சாரம் செய்யுங்கள். இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். கோட்டையில் அன்புமணியை உட்கார வைக்க உறுதி ஏற்றுக்கொள்வோம்” எனப் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்