The Elephant Whisperers பொம்மன், பெள்ளியை சந்தித்த பிரதமர் மோடி சொன்ன விஷயம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதுமலை சென்றிருக்கும் மோடி அங்கு ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை சந்தித்திருக்கிறார்.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் . கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில் முதுமலை சென்றுள்ள மோடி யானைகள் காப்பகத்தை பார்வையிட்டார். அப்போது யானை பராமரிப்பாளர்களான பொம்மன் - பெள்ளி தம்பதியை மோடி சந்தித்தார். சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் திரைப்படத்தில் இந்த தம்பதியின் வாழ்வியல் படமாக்கப்பட்டிருந்தது. முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்ற இந்திய குறும்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றிருக்கிறது. இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டார்கள்.
இதனையடுத்து யானை பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி குறித்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வந்தன. இந்நிலையில் இருவரையும் சந்தித்த மோடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதேபோல இருவரும் வளர்த்துவரும் பொம்மி மற்றும் ரகு எனும் யானைகளையும் அவர் பார்வையிட்டார்.
அப்போது பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோரை டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர். இதுகுறித்து பேசிய பெள்ளி," எங்களுடன் பேசும்போது உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் என்றார். பின்னர் டெல்லிக்கு வருவீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் வரவில்லை. கண்டிப்பாக டெல்லிக்கு வரவேண்டும் என வலியுறுத்தினார். சாலை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும்படி கூறிய பிரதமர் நிச்சயம் அதிகாரிகளிடத்தில் இதுகுறித்து பேசுகிறேன் என்றார்" எனக் குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்