திருமணம் செய்து வைக்குமாறு... குடிபோதையில் தந்தையின் கையை கடித்த மகன்!.. ஆத்திரமடைந்த தந்தை செய்த கொடூரச் செயல்!.. குடியால் நொறுங்கிய குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

 பெரம்பலூரில் போதையில் கையைக் கடித்த மகனை, தந்தை ஆத்திரத்தில் கழுத்தில் கயிறைப் போட்டு இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

திருமணம் செய்து வைக்குமாறு... குடிபோதையில் தந்தையின் கையை கடித்த மகன்!.. ஆத்திரமடைந்த தந்தை செய்த கொடூரச் செயல்!.. குடியால் நொறுங்கிய குடும்பம்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமசாமி - சரஸ்வதி தம்பதி. இவர்களது இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வந்தனர். மூத்த மகனான 29 வயது முத்தையா சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பி கொத்தனார் வேலை செய்து வந்தார்.

வியாழக்கிழமை அன்று, குடிபோதையில் வீட்டிற்கு வந்த முத்தையா தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோரிடம் சண்டை போட்டுள்ளார். மேலும் தனக்கான சொத்துக்களைப் பிரித்துதர வேண்டும் என்றும் தகராறில் ஈடுபட்டுள்ளார். சொத்துக்களை பிரிக்க முடியாது என தந்தை ராமசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆத்திரமடைந்த முத்தையா போதையில் தந்தையை அடித்ததோடு அவரது கையையும் கடித்து விட்டார். லேசான காயமடைந்த ராமசாமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு, பின்னர் மது அருந்தி விட்டு வீட்டிற்குத் திரும்பினார். வீட்டருகே உள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்றிருந்த மகன் முத்தையாவிடம் சென்ற ராமசாமி, வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை என்ன செய்தாய் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு முற்றிய நிலையில் அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சடையப்பர் கோவிலுக்கு இருவரும் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில், போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மகன் முத்தையாவின் கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கியுள்ளார் ராமசாமி.

முத்தையாவும் போதையில் இருந்ததால் அவரிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். முத்தையாவை கொலை செய்து விட்டோம் என்று தெரிந்தவுடன் ராமசாமிக்கு போதை இறங்கி விட்டது.

என்ன செய்வது என்று தெரியாமல் பதறிய அவர் சடையப்பர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டது போல கட்டி தொங்க விட்டு விடலாம் என்று நினைத்து முயற்சி செய்துள்ளார். அது முடியாமல் போகவே வேறு வழியின்றி யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குச் சென்று படுத்துக்கொண்டார். காலையில் சடையப்பர் கோயில் வழியே சென்றவர்கள், சடலத்தைப் பார்த்து விட்டுக் கொடுத்த தகவலையடுத்து வி.களத்தூர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் ராமசாமி, சரஸ்வதி மற்றும் முத்தையாவிடம் அன்று இரவு தொலைபேசியில் பேசிய அவரது நண்பர்கள் சிலரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணை இறுதியில், ராமசாமிதான் குடும்பத் தகராறில் மகனைக் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. ராமசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.

மதுபோதையில் பெற்ற மகனையே கயிற்றால் கழுத்தை இறுக்கி தந்தை கொலை செய்த சம்பவம் வேப்பந்தட்டை கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்