‘தீபாவளிக்கு சொந்த ஊர் பயணம்’... ‘சென்னையில் இருந்து மட்டும் இவ்வளவு பேரா???’... வெளியான தகவல்..!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளி பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் சுமார் 1 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் சனிக்கிழமை (14-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரெயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நேற்று முதல் நாளில் சென்னையில் இருந்து 1 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். நேற்று முதல் இன்று காலை 8 மணி வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 31 பேர் சென்றுள்ளனர். இன்றும், நாளையும் சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பேருந்துகளில் பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது கணிசமாக குறைந்துள்ளது. மேலும் கொரோனா பரவலின் போது ஏற்கனவே சொந்த ஊர் சென்ற பலர் இன்னும் சென்னைக்கு திரும்பவில்லை.
இதனால் கடந்த ஆண்டை விட 35 சதவீதம் குறைவு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசுப் பேருந்துகள் மூலம் நேற்று முதல் நாளை வரை, சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரெயில்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேர் சொந்த ஊர் செல்ல உள்ளனர். அதுதவிர சொந்த வாகனங்களில் சுமார் 1 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டு சுமார் 5 லட்சம் பேர் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்