'தயவுசெய்து அவர ஊர விட்டு வெளிய அனுப்புங்க...' 'கேரளாவில் இருந்து வந்த அதிகாரிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம்...' நள்ளிரவு நடந்த போராட்டம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரளாவில் இருந்து வந்த மத்திய அரசு அதிகாரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என அச்சமடைந்த கிராம மக்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டதால்  நாகர்கோவில் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

'தயவுசெய்து அவர ஊர விட்டு வெளிய அனுப்புங்க...' 'கேரளாவில் இருந்து வந்த அதிகாரிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம்...' நள்ளிரவு நடந்த போராட்டம்...!

மத்திய அரசு அதிகாரி ஒருவர் கேரளாவில் எல்லை பகுதியில் சுங்கத்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் ஏற்படவே நேற்று மாலை கன்னியாகுமாரியில் இருக்கும் தனது சொந்த கிராமத்திற்கு ஓய்வு எடுக்க வந்துள்ளார். இந்த அதிகாரிக்கு உடல் நிலை சரியில்லை என்ற செய்தி ஊர் முழுவதும் பரவ தொடங்கியது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், அதிகமாக பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திலிருந்து இவர் வந்ததால் ஊர் மக்கள் இவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று பயந்துள்ளனர். மேலும் ஒரு சிலர்   தங்களது வீடுகளை பூட்டி விட்டு, குழந்தைகளுடன் உறவினர் வீடுகளுக்கு சென்றனர்.

அதுமட்டும் இல்லாமல் ஒரு சில மக்கள் முக கவசம் அணிந்து கொண்டு அதிகாரியின் வீட்டின் முன் நின்று  அவரை ஊரை விட்டு செல்லுமாறு குரல் எழுப்பி உள்ளனர்.

தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார், மாவட்ட மருத்துவ அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். காய்ச்சல் ஏற்பட்ட அதிகாரியிடம் விசாரணை நடத்தினர், அப்போது அவர் ஏற்கனவே கேரளாவில் பரிசோதனை செய்து, தான் பெற்று இருந்த மருந்துகளை காண்பித்தார்.  அதை அடுத்து கன்னியாகுமரி மருத்துவ குழுவினர் உடனடியாக கேரளாவில் உள்ள மருத்துவ குழுவினரை தொடர்பு கொண்டு பேசினர்.

அந்த அதிகாரிக்கு முழு பரிசோதனை நடத்திய பிறகு தான் கன்னியாகுமரி செல்ல அனுமதித்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் அவருக்கு சாதாரண காய்ச்சல் தான் உள்ளது. 2, 3 நாட்களில் குணம் அடைந்து விடுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு அதிகாரிக்கு கொரோனா இல்லை என்ற தகவலை போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழு அதிகாரிகள் பொது மக்களுக்கு தெரிவித்த பின்னரே கூட்டம் கலைந்து சென்றது. அதுமட்டும் இல்லாமல் இதனை அறிய அவ்வூர் மக்கள் நள்ளிரவு 1 மணி வரை மக்கள் தூங்காமல் வீதிகளில் நின்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CORONAVIRUS