‘சென்னையை குளிர்வித்த திடீர் மழை’!.. இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கு..? வானிலை மையம் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக சென்னையில் வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று திடீரென மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் தி.நகர், வடபழனி, வளசரவாக்கம், கோயம்பேடு, போரூர், கொளத்தூர், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், கே.கே. நகர், மதுரவாயல், கோடம்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.
அதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, குன்றத்தூர், மணலி, புத்தாகரம், அனகாபுத்தூர், திருவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அம்பத்தூர், கொரட்டூர், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர் கிழக்கு, வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் காலை 10.30 மணியளவில் லேசான சாரல் மழை பெய்த நிலையில், 11.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், ‘சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்