'கல்வீச்சு.. கலவரம்.. பேருந்துகள் நகராததால் முடங்கிய கோயம்பேடு..கொந்தளித்த மக்கள்’.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து மக்களும் வாக்களிக்கும் நோக்கில் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதால், சென்னை கோயம்பேடு, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசலால் பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய ஒன்றியத்தில் பன்மைக் கலாச்சாரங்களுடன் வாழும் பலதரப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பெரும் ஜனநாயகத் தேர்தலில் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரும் கடமையாகவும், உரிமையாகவும் கருதப்படும் முக்கிய செயல் வாக்களித்தல், முக்கிய நாள் வாக்களிக்கும் நாள், முக்கிய நிகழ்வு இந்திய ஜனநாயக பொதுத் தேர்தல்.
இந்த தேர்தலில் வாக்களிக்கும் விதமாக சென்னை முதலான பெருநகரங்களில் இருந்து கிராமப்புற, உள் தமிழக மக்கள் வெளியூர் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். என்னதான் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தாலும் கூட, ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடில் உள்ள நெரிசல்கள் குறைந்த பாடில்லை எனும் அளவுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக, பேருந்துகள் கிடைக்காமலும், பேருந்துகள் கிடைத்தாலும் நின்று செல்லும் அளவுக்கு கூட இடவசதிகள் இன்றியும் தவித்துள்ளனர்.
குறிப்பாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகளில் ஏறியமர்ந்த பெண்கள், குழந்தைகள், யுவதிகள், முதியவர்கள் என பலரும் பேருந்துகள் மாலை 6 மணியில் இருந்து நகராமல், 5 மணி நேரத்துக்கும் மேலாக நின்றுகொண்டே இருந்ததால் நெருக்கடியில் தவித்துள்ளனர். கிண்டி உள்ளிட்ட முனையங்களில் இருந்து பேருந்துகளை புக் செய்தவர்கள் பலருக்கும் அவரவர் பயணம் செய்ய வேண்டிய பேருந்துகள் கோயம்பேட்டை விட்டே நகராமல் இருந்துள்ளதாக கூகுள் மேப்பில் காட்டியதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தவிர பெருங்களத்தூரில் நிகழும் போராட்டம் காரணமாக, நகரம் முழுவதும் பேருந்துகள் நகர முடியாத சூழல் உள்ளதாகவும் நமக்கு பிரத்யேகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
தவிர, இரவு 10 மணி அளவில், கோயம்பேட்டில் இரு விபத்துக்களும், தொடர்ந்து உருவான கைகலப்பு மற்றும் சிறு அளவிலான கல்வீச்சு, கலவரங்களும் நிகழ்ந்ததால் போலீஸார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து பேருந்துகளை நகர்த்தத் தொடங்கினர். கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கானோர் ஆங்காங்கே நின்றபடியும், பேருந்துகள் கிடைக்காமல் காத்திருக்கவும், பேருந்துகளை முற்றுகையிட்டு ஏறவும் செய்யும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வலம் வருகின்றன.