'கார்களை வீட்டிற்கு முன்பு நிறுத்தினால் பார்க்கிங் கட்டணம்'... அறிமுகமாகும் புதிய பார்க்கிங் கொள்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதிய பார்க்கிங் கொள்கைப்படி, வீடுகள் முன்பு நிறுத்தப்படும் கார்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் வேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாகப் பெங்களூரு உள்ளது. அங்கு தற்போது சுமார் 95 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இதனால் நகரின் மையப்பகுதி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இதனால் பெங்களூரு என்று சொன்னாலே பலருக்கு முதலில் ஞாபகம் வருவது கடுமையான போக்குவரத்து நெரிசல் தான்.
அதோடு நகரங்களில் உள்ள பல வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. வாகன நெரிசலுக்கு இது ஒரு மிக முக்கியமான காரணமாக உள்ளது. கொரோனா காரணமாக நெரிசல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்துள்ளது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பெங்களூரு நகருக்கு புதிய பார்க்கிங் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த புதிய பார்க்கிங் கொள்கைப்படி, வீடுகள் முன்பு நிறுத்தப்படும் வாகனங்கள் அனுமதி பெற வேண்டும். அதன்படி வீடுகள் முன்பு சாலைகளில் நிறுத்தப்படும் பெரிய கார்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 ஆயிரமும், நடுத்தரமான கார்களுக்கு தலா ரூ.4 ஆயிரமும், சிறிய கார்களுக்கு தலா ரூ.1,000-ம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒருவரின் பெயரில் ஒரு கார் மட்டுமே வீட்டின் முன்பு நிறுத்த அனுமதி வழங்கப்படும்.
அத்தகைய வாகன பார்க்கிங், அவசர வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் அனுமதி பெறுபவர்களின் கட்டிடத்திற்கு முறையாகத் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த புதிய பார்க்கிங் கொள்கை சோதனை அடிப்படையில் முதலில் சில பகுதிகளில் மட்டுமே அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, இந்த புதிய கொள்கையை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.
மற்ற செய்திகள்